புதர் சூழ்ந்த பகுதியில் சிக்குண்ட மூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்!

புதர் சூழ்ந்த பகுதியில் சிக்குண்ட மூன்று வயது குழந்தையுடன் இரவு முழுவதும் தங்கி குழந்தையை பாதுகாத்த நாயை ஆஸ்திரேலிய போலீசார் பாராட்டி வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தை சேர்ந்த மூன்று வயது குழந்தையான அரோரா விளையாட்டுத்தனமாக வீட்டைவிட்டு வெளியேறியபோது தொலைந்துவிட்டதால் அவரை தேடத் தொடங்கினர். பகுதியளவு காது மற்றும் கண் குறைபாடு கொண்ட 17 வயதான மாக்ஸ் என்னும் அவர்களது குடும்ப நாய் அரோராவை பின்தொடர்ந்து சென்றது.

உறவினர்கள் சனிக்கிழமை காலை ஒரு மலைப்பகுதியில் அவர்களை கண்டுபிடிக்கும் வரை, அதாவது 16 மணி நேரம் குழந்தையுடன் அந்த நாய் தங்கியிருந்தது. தங்களின் வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திலுள்ள இடத்திலிருந்து அரோரா கத்தியதை கேட்டதாக குழந்தையின் பாட்டி தெரிவித்துள்ளார்.

“நான் மலையை நோக்கி கத்திகொண்டே சென்றேன். நான் மலையின் உச்சியை அடைந்தவுடன் அங்கு வந்த நாய், அரோரா இருக்கும் இடத்திற்கு என்னை அழைத்து சென்றது” என்று ஆஸ்திரேலியன் பிராட்காஸ்டிங்கிடம் தெரிவித்துள்ளார்.அன்றைய இரவு வெப்பநிலை 15 டிகிரி நிலவிய நிலையில், குழந்தை நாயுடன் சேர்ந்து பாறையொன்றின் அடியில் தங்கியிருந்தது என்று அரோராவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையை தேடுவதற்கான பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்களும், தன்னார்வலர்களும் ஈடுபட்டனர். மாக்ஸின் செயலை பாராட்டிய போலீசார், அதற்கு கௌரவ போலீஸ் நாய் என்று பெயரிட்டனர். “மூன்று வயதே ஆகும் இளம் குழந்தை குளிரான இரவு நேரத்தில் மிகவும் பயந்திருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது” என்று கிரேக் பெர்ரி என்ற காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். அரோராவின் குடும்பத்தினர் மற்றும் காவல்துறையினர் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பினரும் மாக்ஸை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!