பிரதமருக்கு நீதிமன்றம் தடை – கொமன்வெல்த் வரலாற்றில் முதல் முறை

கொமன்வெல்த் வரலாற்றில், முதல் முறையாக பிரதமர் ஒருவர் செயற்படுவதற்கு நீதிமன்றம் ஒன்று, இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ளது என்று சட்டவாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

”இப்போது, இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டதை ஏற்றுக் கொண்டு, பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டியது சிறிலங்கா அதிபரின் அரசியலமைப்புக் கடமையாகும்.

கொமன்வெல்த் வரலாற்றைப் பின்பற்றி சிறிலங்கா அதிபர் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் போது, மகிந்த தரப்பைச் சேர்ந்த மூவர் மாத்திரமே பிரசன்னமாகியிருந்தனர்.

இடைக்கால தடை உத்தரவு வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்த போதே, அனுர பிரியதர்சன யாப்பாவும், சந்திம வீரக்கொடியும் இறுக்கமான முகத்துடன் அவசரமாக எழுந்து வெளியே சென்றனர்.

உத்தரவு வாசிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட உதய கம்மன்பில, இந்த உத்தரவை தாம் எதிர்பார்க்கவில்லை என்றும், போலியான ஆவணங்கள் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை தாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று, மகிந்த ராஜபக்ச விசுவாசிகளில் ஒருவரான சந்திம வீரக்கொடி தெரிவித்திருந்தார்.

எனினும், மகிந்த ராஜபக்ச இந்த உத்தரவை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!