மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை – சித்தராமைய்யா

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு என்ற இடத்தில் கட்டப்படவிருக்கும் அணை திட்டத்திற்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்திருக்கிறார்.

மேக்கேதாட்டு அணை திட்டம் குறித்து கர்நாடக மாநில முதல்வர் குமாரசுவாமி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்குபற்றிய அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்ததாவது,

“எமது தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசின் தலையாய திட்டங்களில் ஒன்று மேக்கேதாட்டு அணையாகும். இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு எந்தவித தொந்தரவும் ஏற்படபோவதில்லை.

ஆனாலும் அரசியல் நோக்கத்திற்காக மேக்கேதாட்டு அணை திட்டத்தை தமிழக அரசு எதிர்த்துள்ளது. கர்நாடகத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் மேக்கேதாட்டு அணையைக் கட்டிக் கொள்வதற்கு எவ்வித தடையும் இல்லை.

இதற்கு சாதகமாகவே உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புகள் அமைந்துள்ளன. மேக்கேதாட்டு அணையைக் கட்டவேண்டாம் என்று கூறுவதற்கு எந்த உத்தரவும் இல்லை.

மேக்கேதாட்டு அணை திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு தமிழக அரசின் ஒப்புதல் கர்நாடக அரசிற்கு தேவையில்லை. நமது திட்டம் சட்டப்படியானதாகும். எனவே உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசிற்கு சாதகமான தீர்ப்பைப் பெற எமது சட்டத்தரணிகள் வாதிடவேண்டும்.

ஒரு வேளை மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தால், அது கர்நாடகத்திற்கு பின்னடைவாக அமையும். அந்த சூழ்நிலை உருவாகாமல் தடுக்க சட்டத்தரணிகள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படவேண்டும். அடுத்தவரும் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு இந்த விவகாரத்திற்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இதை உச்சநீதிமன்றத்தில் தெளிவாக எடுத்துரைக்கவேண்டும்.” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!