அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வம்சாவளிப் பெண் கமலா தேவி!

தமிழ் தாய்க்குப் பிறந்த கமலா தேவி ஹாரீஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, கமலா ஹாரீஸ் கலிபோர்னியாவில் இருந்து செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். மிகச்சிறந்த வக்கீலும் கூட. சென்னையைச் சேர்ந்த ஷியாமலா கோபாலன் என்பவர் இவரின் தாய்.

ஷியாமலா அமெரிக்காவில் புற்று நோய் மருத்துவராக பணியாற்றினார். தந்தை பெயர் டொனால்ட் ஹாரீஸ். இவர் ஜமைக்காவைச் சேர்ந்தவர். கமலா சென்னை மீது அதிகப் பற்றுகொண்டவர். அடிக்கடி சென்னைக்கு விசிட் அடிப்பார். பட்டுச் சேலைகள் மீது கொள்ளைப் பிரியம். சென்னை வந்தால் பட்டுச் சேலைகளை ஆசை ஆசையாக வாங்கிச் செல்வது கமலா ஹாரீஸின் வாடிக்கை. 1964-ம் ஆண்டு பிறந்த கமலா, கலிபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக இருந்தார். கலிபோர்னியாவில் உள்ள ஓக்லேன்டில் பிறந்த கமலா, ஹார்வர்ட் பல்கலையில் பயின்றவர். கலிபோர்னியாவில் இருந்து செனட்டராகத் தேர்வு செய்யப்பட்ட மூன்றாவது பெண். அதோடு, முதல் இந்திய மற்றும் ஜமைக்கா வம்சாவளியைச் சேர்ந்த செனட்டர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபமாவுடன் கமலா தற்போதைய அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் ட்ரம்பின் பதவிக் காலம் 2020- ம் ஆண்டுடன் முடிவடைகிறது.

எனவே, அமெரிக்க ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரீஸ் அதிபர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்கிற செய்தி பரவலாக அடிபடுவதாக ‘பிசினஸ் ஸ்டேன்டர்ட் ‘ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஒபாமா போலவே இவரும் கவர்ச்சிகரமான தலைவராக இருப்பதால் வெற்றிக்குப் பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தலில் அமெரிக்க ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு ஹிலரி கிளின்டன் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். ஹிலரி வெற்றி பெற்றிருந்தால் அமெரிக்க அதிபரான முதல் பெண் என்கிற பெருமையைப் பெற்றிருப்பார். அத்தகைய பெருமை கமலா ஹாரீஸுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் குடியேறிய மக்களிடம் காட்டும் விரோதப் போக்கை கண்டித்து 2016-ல் பெரும் போராட்டம் நடக்க முக்கிய காரணமாக இருந்தவர் கமலா ஹாரீஸ். போராட்டத்துக்குப் பிறகு, ஹாஃபிங்டன் போஸ்ட் வெளிட்டிருந்த செய்தியில், “அமெரிக்காவின் மிகப் பெரிய மாகாணமான கலிபோர்னியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் வெள்ளை மாளிகையில் குடியேற வாய்ப்புள்ளது. அமெரிக்க ஜனநாயகக் கட்சியில் ஒபாமாவுக்குப் பிறகு கவர்ச்சிகரமான தலைவராகக் கமலா விளங்குகிறார்.

கலிபோர்னியா மகாண செனட்டர் தேர்தலில் அவர் வெற்றி பெற்ற விதமே இதைக் காட்டுகிறது’’ என்று கூறியிருந்தது. ஜனநாயகக் கட்சி வேட்பாளராகக் கமலா ஹாரீஸை அறிவிக்க ஒபாமாவின் ஆதரவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. கமலா ஹாரீஸின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பார்த்தால், 49 வயதில் டக்ளஸ் எம்காஃப் என்பரை 2014-ம் ஆண்டு திருமணம் செய்தார். அமெரிக்காவில் புகழ்பெற்ற வழக்கறிஞர்களுள் டக்ளசும் ஒருவர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!