மைத்திரியை இன்று சந்திக்கிறது மகிந்த அணி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று தமது அணியினருடன் முக்கியமான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கிய தலைவர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் எந்த நேரத்திலும் அறிவிக்கலாம் என்ற நிலையிலேயே சிறிலங்கா அதிபர் தமது அணியினரை சந்திக்கவுள்ளார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு எப்படிப்பட்டதாக இருந்தால், எத்தகைய நகர்வுகளை எடுப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தவே இந்தக் கூட்டத்துக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று பசில் ராஜபக்சவுக்கும், அவரது அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கியமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

பத்தரமுல்லவில் உள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் நடந்த இந்த கலந்துரையாடலில், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னரான அரசியல் காய்நகர்த்தல்கள் மற்றும் தேர்தல்களை எதிர்கொள்வதற்கான உத்திகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் எடுக்கப்பட்ட முடிவுகளை அடிப்படையாக வைத்தே, சிறிலங்கா அதிபர் மற்றும் அவரது தரப்பினருடன், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர்கள் பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!