அரசியல் நெருக்கடிக்கு அனைத்துலக தலையீடுகளே காரணம் – கோத்தா

உள்நாட்டுப் படைகள் வலுவாகவும், நாட்டைப் பாதுகாக்கும் ஆற்றலுடனும் இருப்பதால், வடக்கிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புத் தேவையில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் நேற்றுமாலை ஊடகங்களைச் சந்தித்த கோத்தாபய ராஜபக்சவிடம், வடக்கிற்கு ஐ.நாவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று புலம்பெயர் தமிழ் அமைப்பு ஒன்று விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாக, ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர், “எமது படைகளின் துணையுடன், அந்த விவகாரங்களை எங்களால் தீர்த்துக் கொள்ள முடியும்.

இறைமையுள்ள நாடு என்ற வகையில், சிறிலங்காவின் அரசியல் விவகாரங்களில் அனைத்துலக சக்திகள் தலையிட முடியாது.

சில ஆட்சிகளில் அனைத்துலக தலையீடுகளின் விளைவாகவே தற்போதைய அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் தேசிய பாதுகாப்பு தொடர்பாக போதிய புரிந்துணர்வு இல்லாமல் செயற்பட்டது.

அவர்கள் தேசிய பாதுகாப்பு குறித்து அறிந்திருந்தால், மட்டக்களப்பில் இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருக்காது.

தற்போதைய அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கு உறுதியான அரசாங்கத்தை அமைப்பதற்கு மக்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

தனிப்பட்ட நலன்களுக்காக அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்யக் கூடாது.19 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பிரச்சினை இதனை தெளிவுபடுத்தியுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!