பிரதமர், அமைச்சர்கள் பதவி நீக்கப்படவில்லை – என்கிறார் பீரிஸ்

பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பணியில் ஈடுபடுவதற்கே மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதே தவிர, அவர்களை சட்டரீதியற்றவர்கள் என்ற அறிவிக்கவில்லை என, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

“தற்போது, பிரதமர் மற்றும் அமைச்சர் பதவிகள் வெற்றிடமாக உள்ளது என்பது தவறான கருத்து.

இந்தப் பதவிகளில் இருந்தவர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது முற்றிலும் பொய்யானது.

பிரதமரையோ, அமைச்சர்களையோ, மேன்முறையீட்டு நீதிமன்றம் பதவியில் இருந்து நீக்கவில்லை.

அவர்கள் தமது பதவிகளில் இருந்து பணியாற்றுவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகில், நீதிமன்றத்தினால், பதவியில் இருந்து பிரதமர் அகற்றப்பட்ட நிகழ்வுகள் வரலாற்றில் உள்ளது. பாகிஸ்தான் பிரதமரை நீதிமன்றம் பதவி நீக்கம் செய்திருக்கிறது.

ஆனால் பிரதமர், தனது கடமைகளை நிறைவேற்றுவதில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட முதல் நிகழ்வாக இது இருக்கிறது.

எனினும், நீதிமன்ற உத்தரவை நாங்கள் மதிக்கிறோம். எனினும் அதனை நாங்கள் ஏற்கவில்லை. அதனால் தான் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறோம்.

தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இப்போதுள்ள ஒரே வழி, பொதுத்தேர்தலை நடத்துவது தான்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!