சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜோத்பூர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் ஆசாராம் பாபு (77). இவரது ஜோத்பூர் ஆசிரமத்தில் தங்கி படித்த உ.பி. ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்த சிறுமி, ஆசாராம் பாபு தன்னை கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார். இதேபோல் பல்வேறு பலாத்கார வழக்குகள் இவர் மீது குவிந்தன.

இதையடுத்து, ஆசாராம் பாபுவை கடந்த 31-8-2013 அன்று போலீசார் கைது செய்து கற்பழிப்பு மற்றும் குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். தற்போது ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, ஷாஜஹான்பூர் சிறுமி வழக்கில் ஆசாராம் பாபு மற்றும் அவருடன் குற்றம்சாட்டப்பட்ட மற்ற நபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கடந்த நான்காண்டுகளாக ஜோத்பூர் நகரில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசுத் தரப்பு மற்றும் எதிர்தரப்பு வாதங்கள் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்றுவந்த நிலையில் ஏப்ரல் 25-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி மதுசூதன் சர்மா தெரிவித்திருந்தார்.

அதன்படி ஆசாராம் பாபு அடைத்து வைக்கப்பட்டுள்ள ஜோத்பூர் சிறைக்கு நீதிபதி இன்று சென்று, அங்குள்ள விசாரணை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கினார். அப்போது ஆசாராம் பாபு உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். 2 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

சற்று நேரத்திற்கு பின்னர் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டன. சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனையும், மற்ற இரு குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டுகள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி ஆசாராம் பாபு ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடும் என்பதால் சிறையை சுற்றியும், அருகில் உள்ள பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லி, ராஜஸ்தான், குஜராத், அரியானா மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!