குழப்பங்களுக்கு மத்தியில் கொழும்பு வந்துள்ள அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி

சிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் நேற்று கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு , மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான, பதில் பிரதி உதவிச் செயலர் டேவிட் ரன்ஸ், என்ற மூத்த இராஜதந்திரியே கொழும்பு வந்துள்ளார்.

கடந்த ஒக்ரோபர் மாதமே இவர், சிறிலங்கா உள்ளிட்ட தெற்கு, மத்திய ஆசிய நாடுகளின் விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தில் முக்கியமான இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

இவர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

சிறிலங்காவில் முறையான அரசாங்கம் ஒன்று பதவியில் இல்லாத – அரசியல் குழப்பங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் கொழும்பு வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதி உதவிச் செயலர் டேவிட் ரன்ஸ், நேற்று, சிறிலங்காவின் சிந்தனையாளர் குழாமைச் சேர்ந்த வல்லுனர்களைச் சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

இந்தோ- பசுபிக் மற்றும் அமெரிக்காவின் இந்தோ- பசுபிக் மூலோபாயத்தில், சிறிலங்காவின் பங்கு, குறித்து அவர் இந்தச் சந்திப்பின் போது கவனம் செலுத்தியிருந்தார்.

அத்துடன், எந்தவொரு நாட்டையும் விலக்கி வைக்காமல், பிராந்தியத்தில் சுதந்திரம், வெளிப்படை மற்றும் செழிப்பு ஆகியவற்றை முன்னெடுப்பதே, தமது மூலோபாயம் என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!