நாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதம் – உச்சநீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு

நாடாளுமன்றத்தைக் கலைத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பு அரசியலமைப்புக்கு, எதிரானது, என்று சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த நொவம்பர் 9ஆம் நாள், நாடாளுமன்றத்தைக் கலைத்து சிறிலங்கா அதிபர் வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பை சவாலுக்கு உட்படுத்தி, 13 மனுதாரர்கள், உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை, கடந்த 4ஆம் நாள் தொடக்கம், 7ஆம் நாள் வரையான நான்கு நாட்கள், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான 7 நீதியரசர்களைக் கொண்ட குழாம் விசாரணை நடத்தியிருந்தது.

இந்த மனுக்கள் தொடர்பான தீர்ப்பு இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும் என்று பதிவாளர் அறிவித்திருந்தார்.

எனினும், விசாரணை அறைக்கு நீதியரசர்கள் குறித்த நேரத்துக்கு வரவில்லை. 7 நீதியரசர்களும், மாலை 4.50 மணியளவிலேயே 502 ஆம் இலக்க நீதிமன்ற அறைக்கு வந்தனர்.

அதன் பின்னர் அவர்கள் தீர்ப்பை வாசித்தனர். இந்த தீர்ப்பிலேயே, நாடாளுமன்றக் கலைக்கும் சிறிலங்கா அதிபரின் உத்தரவு சட்டவிரோதமானது என்று ஒருமனமாக தீர்ப்பளித்தனர்.

நான்கரை ஆண்டுகளுக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை என்று ஏழு நீதியரசர்களும் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றத்தை சிறிலங்கா அதிபர் கலைக்க வேண்டுமாயின், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியே அதனை செய்ய முடியும் என்றும் நீதியரசர்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், உச்சநீதிமன்றத்துக்கு வெளியே ஐதேக ஆதரவாளர்கள் பெரும் ஆரவார கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை, உச்சநீதிமன்ற வளாகத்துக்குள்ளேயும், வெளியேயும், பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!