சிறிலங்கா அதிபர் இன்றிரவு முக்கிய முடிவு

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட பின்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார்.

மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சர்கள் பிரதமர் மற்றும் அமைச்சர்களாகச் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றில் மகிந்த ராஜபக்ச தரப்பு தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உத்தரவு வழங்கப்படும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்குப் பின்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்றிரவு முக்கிய கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவிலேயே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!