அமைச்சர்களுடன் பதவி விலகுவார் மகிந்த?

Sri Lanka Politics
சிறிலங்காவின் பிரதமராக கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் நியமிக்கப்பட்ட, மகிந்த ராஜபக்ச தனது அமைச்சரவையுடன், பதவியில் இருந்து விலகுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர் மகிந்த ராஜபக்ச, நேற்றிரவு விஜேராம மாவத்தையில் உள்ள இல்லத்தில், கூட்டு எதிரணியில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இந்தக் கூட்டத்தில், கருத்து வெளியிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள், அரசாங்கத்தில் இருந்து விலகி, எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டும் என்றே வலியுறுத்தியிருந்தனர்.

எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று நடத்தப்படும் விசாரணைகளில் அளிக்கப்படும் உத்தரவுக்குப் பின்னரே இறுதி முடிவை எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நேற்று மாலை உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட மகிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, தாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயார் என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!