கூட்டத்தை விட்டு திடீரென வெளியேறிய மைத்திரி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் கூட்டத்தில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திடீரென வெளியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிறிலங்கா அதிபரின் இல்லத்தில் நேற்று நடந்த கட்சி அமைப்பாளர்களுக்கான கூட்டத்தில், தேர்தல் கூட்டு தொடர்பாக கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த திட்டத்துக்கு தொகுதி அமைப்பாளர்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திடீரென எழுந்து வெளியே போனார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அத்துடன் கூட்டமும், முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

சிறிலங்கா அதிபர் அவசரமாக கூட்டத்தில் இருந்து வெளியேறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்குப் பதிலளித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் றோகண லக்ஸ்மன் பியதாச,

“ அதிபர் முன்கூட்டியே வெளியேறினார். தனிப்பட்ட பயணமாக வெளிநாடு செல்வதற்காக, விமான நிலையத்துக்குப் புறப்படவே அவர் அங்கிருந்து சென்றார்” எனத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!