கேமராவுக்கு போஸ் கொடுத்தது போதும்- மோடி மீது ராகுல் பாய்ச்சல்

மேகாலயா நிலக்கரி சுரங்கத்தில் 15 நாட்களாக சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்க தவறிய மோடி கேமராவுக்கு போஸ் கொடுப்பதில் அக்கறை காட்டுவதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

மேகாலயா மாநிலம், கிழக்கு ஜெயின்டியா மலை மாவட்டத்தில், மலையடிவாரத்தில் அமைந்துள்ள லும்தாரி கிராமத்தில் ஜேம்ஸ் சுக்லியன் என்பவருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் உள்ளது.

அந்த சுரங்கத்தில் கடந்த 13-ம் தேதி 300 அடி ஆழத்தில் இருந்து நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் 13 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அருகாமையில் உள்ள லைடெய்ன் ஆற்றில் திடீரென்று பயங்கரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையை கடந்து நிலபரப்பில் பாய்ந்த வெள்ளம் எதிர்பாராத விதமாக அந்த நிலக்கரி சுரங்கத்திற்குள் பெருக்கெடுத்து பாய்ந்தது.

சுமார் 70 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கிய நிலையில் தொழிலாளர்களை காக்க அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் பேரில் கவுகாத்தியில் இருந்து விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அங்கு தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்றி சுரங்கத்தினுள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இச்சம்பவம் நிகழ்ந்து 15 நாட்கள் ஆகியும் உள்ளே இருந்து இதுவரை ஒருவர்கூட மீட்கப்படவில்லை.

போதிய உபகரணங்கள் இல்லாததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்படுவதாக அரசு அதிகாரிகள் கூறிவரும் சமாதானம் பொதுமக்களை ஆத்திரம் அடைய செய்துள்ளது.

இந்நிலையில், இந்த தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் அக்கறை காட்டுமாறு பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வலியுறுத்தியுள்ளார்.

அசாம் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற போகிபீல் பாலம் திறப்பு விழாவுக்கு சென்றிருந்த பிரதமர் மோடி, அந்த பாலத்தின் மீது சிறிது தூரம் நடந்து சென்றும், பாலத்தின் அடியில் எட்டிப்பார்த்தும் மக்களை பார்த்து கை அசைப்பது போல் ஏராளமான புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.

இதை சுட்டிக்காட்டியுள்ள ராகுல் காந்தி, ‘கேமராவுக்கு போஸ் கொடுத்தது போதும் பிரதமரே, உயிருக்கு போராடும் தொழிலாளர்களை காப்பாற்றுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

‘15 தொழிலாளர்கள் வெள்ளம் சூழ்ந்த நிலக்கரி சுரங்கத்துக்குள் சிக்கி 15 நாட்களாக மூச்சுக்காற்று கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதேவேளையில், அவர்களை காப்பாற்ற வேண்டிய பிரதமர் பாலத்தின்மீது கேமராக்களுக்கு போஸ் கொடுப்பதில் அக்கறை காட்டுகிறார்.

உயிருக்கு போராடும் தொழிலாளர்களை மீட்க சக்திவாய்ந்த தண்ணீர் பம்புகளை தர அவரது அரசு மறுக்கிறது. பிரதமரே! அவர்களை காப்பாற்றுங்கள்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!