5 வருடங்களுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த சிறுமி

கேதார்நாத் வெள்ளத்தின்போது அடித்துச் செல்லப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி, 5 வருடங்களுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்த சம்பவம் அலிகரில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரின் பன்னதேவி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஹரிஷ் சந்த் மற்றும் சகுந்தலா தேவி. இவர்களின் மகன் ராஜேஷ் சந்த், அவரின் மனைவி மற்றும் மகள் சன்சல் ஆகியோர் கேதார்நாத்துக்கு புனித யாத்திரை சென்றனர். 12 வயது சிறுமியான சன்சல், மனநலம் பாதிக்கப்பட்டவர்.

2013இல் அவர்கள் கேதார்நாத் சென்றபோது பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சன்சலும் அவரின் தந்தை ராஜேஷும் அடித்துச் செல்லப்பட்டனர். சன்சலின் தாய் சில நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பினார். ராஜேஷ் இன்னும் வீடு திரும்பவில்லை.

சன்சல் உயிரிழந்துவிட்டார் என எல்லோரும் நினைத்த வேளையில், சில யாத்ரீகர்கள் சிறுமியைக் காப்பாற்றினர். சிறுமியை ஜம்முவில் உள்ள ஓர் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர்.

தற்போது சன்சலை அவர்களின் குடும்பத்தில் மீண்டும் சேர்த்த அலிகர் சமூக சேவை அமைப்பின் இயக்குநர் ஞானேந்திர மிஸ்ரா இதுகுறித்துக் தெரிவித்தபோது,

”கடந்த சில மாதங்களாக சன்சல் அலிகர் நகரத்தைப் பற்றி ஏதோ கூற முயற்சித்திருக்கிறாள். அவளுக்குள்ள குறைந்தபட்ச பேச்சுத்திறனில் இது வெளிப்பட்டுள்ளது. இதை ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள் கவனித்துள்ளனர்.

இதனால் அவர்கள் அலிகர் சட்டப்பேரவை உறுப்பினர் சஞ்சீவ் ராஜாவுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் என்னிடம் இதுகுறித்துப் பேசினார். பொலிஸாரின் உதவியுடன் சன்சலின் குடும்பத்தைக் கண்டுபிடித்தோம்” என்றார்.

‘சன்சல் வீடு திரும்பியது அதிசயம்’ என அவரின் தாத்தா ஹரிஷ் தெரிவித்தார்.

”சன்சல் எப்போதும் காணாமல் போன தந்தையின் நினைவாகவே இருக்கிறாள். அவளுக்காகவாவது என் மகன் ராஜேஷ் விரைவில் வீடு திரும்ப வேண்டும்” என மேலும் தாத்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!