பொலிவியாவில் கடத்தப்பட்ட அர்ஜென்டினா பெண் 32 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு

பொலிவியாவில் ஆட்கடத்தல் கும்பலால் கடத்தப்பட்ட பெண் 32 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்டு, அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டார்.

பொலிவியாவில் 1980களில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒரு சிறுமி ஆட்கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டார். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ஆனால் அவரைப் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் கடத்தப்பட்ட பெண் தெற்கு பொலிவியான் பெர்மிஜோ பகுதியில் இருப்பதாக இந்த ஆண்டின் துவக்கத்தில் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பொலிவியா மற்றும் அர்ஜென்டினா போலீசார் இணைந்து, அந்த பெண் குறித்த விவரங்கள் மற்றும் அங்க அடையாளங்களை வைத்து தெற்கு பொலிவியாவில் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட முயற்சிக்குப் பிறகு அந்த பெண்ணை போலீசார் கண்டுபிடித்தனர். ஆட்கடத்தல் கும்பலில் சிக்கியிருந்த அந்த பெண்ணையும், அவரது மகனையும் இந்த மாத துவக்கத்தில் மீட்டு குடும்பத்தினருடன் சேர்த்து வைத்துள்ளனர். தற்போது அந்த பெண்ணுக்கு 45 வயது ஆகிறது.

கடத்தப்பட்ட பெண் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டு, மார் டெல் பிளாட்டா பகுதியில் உள்ள அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்திருப்பதாக அர்ஜென்டினா காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், அந்தப் பெண்ணை கடத்திச் சென்ற நபர் குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!