சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் வேண்டுகோள் – ஜெயலலிதா மரணம் பற்றி விசாரியுங்கள்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டில் உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவனையில் சேர்க்கப்பட்டு, 75 நாட்களுக்குப் பிறகு மரணமடைந்தார். ஆனால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியதையடுத்து, அது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்தது. அந்த ஆணையம் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் அழைத்து விசாரணை நடத்திவருகிறது. இந்நிலையில், இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டினார்.

“அந்த 75 நாட்களில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், சட்டமன்ற உறுப்பினர்களை, கட்சி நிர்வாகிகளைப் பார்க்கவே விடவில்லை. ஆனால், அவர் இட்லி சாப்பிட்டார், தோசை சாப்பிட்டார் எனக் கூறி 1 கோடியே 17 லட்சம் அவரது மருத்துவ செலவில் சேர்க்கப்பட்டுள்ளது. யார் இவ்வளவு சாப்பிட்டது? ஜெயலலிதா உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது பார்க்க வந்தவர்கள் வேறு இடங்களில் தங்குவதுதானே முறை? ஆனால், ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்டவர்கள் அங்கே தங்கி, மருத்துவமனையை விடுதியாக மாற்றி 1 கோடியே 17 லட்ச ரூபாய்க்கு இட்லியும் தோசையும் சாப்பிட்டார்கள் என்றால் அதில் என்ன நடந்தது? இதில் ஏதோ மர்மம் இருக்கிறது.” என சி.வி. சண்முகம் குற்றம்சாட்டினார்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக, ஆணையத்தின் வழக்கறிஞர் ஆணையத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஏற்கனவே எதிர் மனுதாரர்களாக உள்ள சசிகலா மற்றும் அப்பல்லோ மருத்துவமனை போக, முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவ் மற்றும் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டுமெனக் கூறியிருந்தார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான தகவல்கள் முரணானதாக இருப்பதால் இவர்களை விசாரிக்க வேண்டுமென்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

அதனைச் சுட்டிக்காட்டிய சி.வி. சண்முகம், “இவர்கள் பொய்யான தகவலைத் தந்திருக்கிறார்கள். முறையான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் ஜெயலலிதா உயிரோடு இருந்திருப்பார். ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோகிராம் செய்திருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பார். மூன்று மருத்துவர்கள் அதைச் சொல்லியிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது அந்த சிகிச்சையைச் செய்திருக்கலாம். ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ கிராம் செய்ய வேண்டாமென சொன்னது யார்? அந்த மருத்துவமனையை ஆட்டிப்படைத்தது யார்? ஆஞ்சியோகிராம் செய்தால் ஜெயலலிதா பிழைத்துவிடுவார், அது நடக்கக்கூடாது என நினைத்தது யார்?” என்று கேள்வியெழுப்பினார்.

மேலும் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிசிக்சை அளிப்பதை சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தடுத்துவிட்டதாகவும் சி.வி. சண்முகம் குற்றம்சாட்டினார். “வெளிநாட்டில் சிகிச்சை பெற மத்திய அரசு ஏர் ஆம்புலன்ஸ் தருவதாக சொன்னது. ஆனால், அதைத் தடுத்திருக்கிறார்கள். ஜெயலலிதா வெளிநாட்டில் சிகிச்சைபெற்றால், இந்திய மருத்துவர்கள் மீதான நம்பிக்கையும் கௌரவமும் போய்விடும் என்று சொல்லியிருக்கிறார். முதல்வரின் உயிரைவிட மருத்துவர்களின் கௌரவம் முக்கியம் என்று கூறிய சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணனின் பின்னணியை இந்த அரசு விசாரிக்க வேண்டும்” என்றும் சி.வி. சண்முகம் கூறினார்.

முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகனராவ் விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளிக்கும்போது, ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிப்பது குறித்து அமைச்சரவையில் கூறியதாகவும் ஆனால் அமைச்சரவை அதை நிராகரித்துவிட்டதாகவும் கூறியதைச் சுட்டிக்காட்டிய சி.வி. சண்முகம், “அது மிகப் பெரிய பொய். ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதிலிருந்து இறக்கும்வரை அமைச்சரவை கூடவேயில்லை. அதற்கு நான் சாட்சி. அமைச்சரவை கூடி ராமமோகன ராவை விசாரிக்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார்.

தாங்கள் சந்தேகப்பட்டதைப்போல, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் விசாரணை ஆணையம் இது தொடர்பாக இடைக்கால அறிக்கை ஒன்றை அளிக்க வேண்டும் என்றும் கூறிய அமைச்சர், “ஆணையத்தால் இந்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாது. காவல்துறை ஒரு சிறப்பு விசாரணை குழுவை அமைத்து, சம்பந்தப்பட்டவர்களை காவலில் எடுத்து ஜெயலலிதாவின் மரணத்தில் என்ன நடந்தது என்று விசாரிக்க வேண்டும். ஜெயலலிதாவின் மரணத்தை குற்ற நடைமுறைச் சட்டத்தின் 174-வது பிரிவின் கீழ் சந்தேகத்திற்குரிய மரணம் என வழக்குப் பதிவுசெய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்த மர்மங்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என செய்தியாளர்கள் கேட்டபோது, ஜெயலலிதாவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள்தான் இருக்கிறார்கள் என்று சி.வி. சண்முகம் பதிலளித்தார். மாநில அமைச்சர் ஒருவர், அதே அரசில் மூத்த நிலையில் பணியாற்றும் செயலாளர் குறித்தே குற்றம்சாட்டியிருப்பது தலைமைச் செயலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!