மைத்திரிக்கு நெருக்கடி – இன்று காலை உருவாகிறது சுதந்திரக் கட்சி மாற்று அணி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 20 அமைப்பாளர்கள் தமது பதவியில் இருந்து விலகி, தனி குழுவொன்றை உருவாக்கவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி – மாற்றுக் குழு என்ற பெயரில் செயற்படத் திட்டமிட்டுள்ள இந்த அணியினர், தமது எதிர்கால அரசியல் திட்டங்கள் தொடர்பாக கொழும்பு பொது நூலகத்தில் இன்று காலை நடத்தவுள்ள செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கவுள்ளனர்.

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியுள்ள இந்தக் குழுவினர், இன்று காலை தமது அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து வெளிப்படுத்தவுள்ளனர்.

அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவொன்று கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை நாளை சந்தித்துக் கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது குறித்து சிறிலங்கா அதிபருடன் பேச்சு நடத்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கூட்டு அரசாங்கத்தின் அமைச்சர்களாக பணியாற்றிய சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது, தமது தொகுதிகளில் கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்புகளை தவிர்த்து வருகின்றனர்.

சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது அரசியல் எதிர்காலம் குறித்து தமீவிர கரிசனை கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டு முக்கிய தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது அவசியம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

இதனால் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!