கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி செலுத்திய விவகாரம்: நிஜ சிக்கல்கள் குறித்து மருத்துவர் அமலோற்பவநாதன் பேட்டி.

சாத்தூரில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி மற்றும் ஹெபடைட்டிஸ்-பி வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரது ரத்தம் ஏற்றப்பட்டதில், அந்த கர்ப்பிணி பெண்ணுக்கும் இந்த இரு நோய்களும் பரவியிருக்கின்றன. ரத்தம் கொடுத்த இளைஞர் குற்ற உணர்வால் விஷமருந்தி தற்கொலைசெய்துகொண்டுள்ளார். ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவரும் நிலையில், இந்த விவகாரம் பொது மருத்துவத் துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து ரத்த தானம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களை தமிழ்நாடு உறுப்பு மாற்ற ஆணையத்தின் முன்னாள் தலைவரும் இரத்தநாள அறுவைசிகிச்சை மருத்துவருமான ஜெ.அமலோற்பவநாதன் உடன் பேசினார் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன்.

இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் என்ன நடந்தது, தவறு எங்கே நடந்திருக்குமென நினைக்கிறீர்கள்?

நவம்பர் 2016ல் இதே நபர், அவருக்கு 17 வயது இருக்கும்போது சிவகாசி பொது மருத்துவமனையில் ஒரு ரத்ததான முகாமில் ரத்ததானம் செய்திருக்கிறார். அவருக்கு செய்யப்பட்ட எச்.ஐ.வி. பரிசோதனையில், எச்.ஐ.வி இருப்பதாக தெரியவந்திருக்கிறது. அவரை தொடர்புகொள்ள முயற்சித்து முடியாமல் போனதாக அரசுத் தரப்பில் சொல்கிறார்கள். இரண்டு வருடங்களாக அதைச் செய்ய முடியவில்லை. 2018 டிசம்பரில் அதே மருத்துவமனையில் மீண்டும் அவர் ரத்த தானம் செய்கிறார். அங்கு அந்த ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டபோது, சோதனையில் ஏதும் தெரியவில்லை. உடனே அந்த ரத்தம் சாத்தூரில் இருந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்றப்பட்டது.

இதற்குப் பிறகு, வெளிநாடு செல்வதற்காக ஒரு தனியார் லேபில் மீண்டும் தனது ரத்தத்தை ஆய்வுசெய்கிறார். அங்கு எச்.ஐ.வி. இருப்பதாக தெரிகிறது. உடனே மீண்டும் சிவகாசி மருத்துவமனையை அணுகி, தகவலை சொல்கிறார். உடனே மீண்டும் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த முறை அவருக்கு எச்.ஐ.வி இருப்பது தெரிகிறது. இதை 10ஆம் தேதி சம்பந்தப்பட்ட இளைஞரிடம் தெரிவிக்கிறார்கள்.

ரத்தம் ஏற்றப்பட்ட பெண் டிசம்பர் 19ஆம் தேதி மீண்டும் மருத்துவமனைக்கு வருகிறார். அப்போது அவரைப் பரிசோதித்தபோது அவருக்கு எச்.ஐ.வி. இருப்பது தெரியவருகிறது. இப்படித்தான் இந்த சம்பவம் நடந்தது. இதில் தவறு இரண்டு இடங்களில் நடந்திருக்க வாய்ப்பு உண்டு. முதல் தடவை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எச்.ஐ.வி இருப்பதாகத் தெரிந்த பிறகு, தொடர்புகொள்ள முயற்சித்தார்களா, இல்லையா என்பதில் தெளிவில்லை.

சாதாரணமாக ஒருவர் ரத்த வங்கியில் ரத்தம் கொடுக்கச் சென்றால் ஒரு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் எச்ஐவி இருந்தால் எனக்குத் தெரிவிக்க வேண்டும் அல்லது தெரிவிக்க வேண்டாம் என இரு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் எனக்குத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறிவிட்டால் அவருக்கு அதனைத் தெரிவிக்க மாட்டார்கள்; நோய் தொற்று உள்ள ரத்தத்தை மட்டும் அழித்துவிடுவார்கள். ஆனால், எனக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கூறியிருந்தால் அவருக்கு நோய்த்தொற்று குறித்து தெரிவிப்பார்கள். எச்.ஐ.வி. மட்டுமல்ல, ஹெபடிடிஸ்-பி தாக்குதல் இருந்தாலும் தெரிவிப்பார்கள். 2016ல் இந்த நபரை ஏன் தொடர்புகொண்டு தெரிவிக்கவில்லையெனத் தெரியவில்லை.

இரண்டாவது முறை அந்த நபர் சிவகாசி மருத்துவமனையில் இரத்தம் கொடுத்தபோது, சோதனையில் இவருக்கு நோய்த்தொற்று இல்லையென முடிவு வந்தது, ஆய்வகத்தில் நிகழ்ந்த தவறாக இருக்க வேண்டும்.

இரத்த தானம் கொடுக்க விரும்பும் நபர், ரத்த தானம் கொடுக்கும் முன்பாக எந்தெந்த விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்?

உங்கள் ரத்தம் மற்றொருவர் உயிரைக் காப்பாற்றுவதற்காகக் கொடுக்கப்படுகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுபவர்கள், ஊசி மூலம் போதை மருந்து பயன்படுத்துபவர்கள் தயவுசெய்து ரத்தம் கொடுக்காதீர்கள். இந்த விவகாரத்தைப் பொருத்தவரை, ரத்ததானம் செய்த ஒருவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருக்கிறது என்று தெரிந்தவுடன் அவரைத் தொடர்புகொள்ள முயற்சிக்கிறோம். அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லையென்றவுடன் விட்டுவிடலாமா? இந்த முறை அப்படித்தான் விட்டுவிட்டோம். விடக்கூடாது என்பதுதான் நமக்கான பாடம்.

மாநிலத்தில் எய்ட்ஸைக் கட்டுப்படுத்த மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் என ஒன்று இருக்கிறது. யாருக்கெல்லாம் நோய்த் தொற்று இருக்கிறது என்ற விவரம் அங்குள்ள ஒரு பதிவேட்டில் ஏற்றப்படும். அதனை மாதம்தோறும் ஆய்வுசெய்வார்கள். அதில் நோய்த் தொற்று உள்ளவர்களைத் தொடர்பு கொண்டார்களா, மருத்துவம் துவங்கப்பட்டதா என்ற விவரங்கள் ஆய்வுசெய்யப்படும். ஆனால், இந்த நபர் எப்படி விட்டுப் போனது என்பது தெரியவில்லை.

ஒரு நபருக்கு அப்போதுதான் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தால் தெரியாதே..அப்போது என்ன செய்வது?

இந்த குறிப்பிட்ட வழக்கில் ‘window period’ என்பது மிக அபத்தமான வாதம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், நீங்கள் சொல்வதைப் போல உண்மையிலேயே ஒரு நபர் ‘window period’ல் இருந்தால் கண்டுபிடிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், அந்த சதவீதம் மிகக் குறைவு. பத்தாயிரம் பேரை சோதித்தால் 3-4 பேர்தான் அந்த காலகட்டத்தில் இருப்பார்கள். ‘window period’ ல் இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாது. அதேபோல ‘Anti-bodies’ எனப்படும் நோய் எதிர்ப்புக் கூறு மிக பலவீனமாக ரத்தத்தில் தென்படுவதும் உண்டு. அப்போதும் அதைக் கண்டுபிடிக்க முடியாது. அதனால்தான், பாதுகாப்பற்ற உடலுறவு கொள்பவராக இருந்தால், ஊசி மூலம் போதை மருந்து எடுப்பவராக இருந்தால் ரத்தம் கொடுக்காதீர்கள் என்கிறோம்.

ரத்தம் கொடுத்த இளைஞர் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏன் வரவில்லை?

அவருடைய நோய் எதிர்ப்புத் திறன் சிறப்பானதாக இருந்திருக்கலாம். அல்லது சிறு சிறு பிரச்சனைகள் இருந்து அவர் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம்.

தானமாக பெறப்பட்ட ரத்தத்தில் என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகின்றன?

முதலில் எச்.ஐ.வி. இருக்கிறதா என பரிசோதனை செய்வார்கள். இரண்டாவதாக ஹெபடைட்டிஸ்-பி பரிசோதனையும், ஹெபடைட்டிஸ் -சி மற்றும் மலேரியா பரிசோதனையும் செய்வார்கள்.

தானம் அளிக்கப்பட்ட ரத்தத்தைப் பரிசோதிக்கும்போது அதில் எச்.ஐ.வி நோய்த் தொற்று இருப்பதாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், அந்த நபர் தனக்கு எச்.ஐ.வி. நோய்த் தொற்று இருந்தால் தெரிவிக்க வேண்டாம் என்று சொல்லியிருந்தால், என்ன செய்வது?

சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருந்தால், பிரச்சனை சிக்கலானதுதான். ரத்தம் அழிக்கப்பட்டுவிடும். ஆனால், அவரை பின்தொடர்ந்து எப்படி சிகிச்சை அளிக்க முடியும்? உதாரணமாக, ஒருவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தானம் பெறப்பட்ட ரத்தத்தை பரிசோதிக்கும்போது தெரியவருகிறது. அந்த நபருக்கு போதைக்காக பயன்படுத்தப்பட்ட ஊசிமூலம் அது வருகிறது என வைத்துக்கொள்வோம். என்ன செய்வது? அந்த நபர் ஒரு போதைப் பொருள் பயன்படுத்தும் வட்டத்திற்குள் இருக்கிறார் என்பதை நாம் உடனே புரிந்துகொண்டுவிடலாம். இதை நாம் காவல்துறைக்கு சொல்ல வேண்டுமா, கூடாதா?

17 வயதுச் சிறுவனுக்கு எச்.ஐ.வி. மற்றும் ஹெபடைட்டிஸ் -பி ஆகிய இரு நோய்களும் இருக்கிறதென்றால் அந்தப் பகுதியில் ஊசி மூலம் போதை பயன்பாடு இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். அல்லது 13-14 வயதிலிருந்து தகாத உறவில் அவரை யாராவது ஈடுபடுத்தியிருக் வேண்டும். இந்த இரண்டுமே மிகப் பெரிய பிரச்சனைகள் அல்லவா? அப்படியானால், அந்தப் பகுதியில் போதைப் பொருளை சப்ளை செய்பவர் யார் என்று பார்க்க வேண்டியது யார் பொறுப்பு? காவல்துறைக்கு தகவல் அளித்தால்தான் அவர்கள் நடவடிக்கை எடுக்க முடியும். அவர்களுக்கு தகவல் கொடுக்கலாமா, கூடாதா என்ற நெறிமுறை சார்ந்த விவாதங்கள் இன்னும் இருக்கின்றன.

மரணத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள இரு நோய்களுக்கான காரணிகளை கட்டுப்படுத்தாமல் நோயை எப்படி கட்டுப்படுத்த முடியும்? குறிப்பாக ஊசி மூலம் போதைப் பொருள் பயன்படுத்துவதைத் தடுப்பதென்பது நிச்சயம் காவல்துறை உதவியின்றி செய்ய முடியாது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இதில் எல்லோருமே எச்.ஐ.வி குறித்தே திரும்பத் திரும்ப பேசுகிறோம். அந்த கர்ப்பிணி பெண்ணைப் பொறுத்தவரை எச்.ஐ.வி. ஒரு பெரிய பிரச்சனை அல்ல. ஹெபடைட்டிஸ்-பி தான் மிக மோசமான நோய்த்தொற்று. நம் சமூகத்தில் எச்.ஐ.வி குறித்து ஒரு சமூகத் தடை இருப்பதால் அதைப் பற்றியே பேசுகிறோம். ஆனால், ஹெபடைட்டிஸ்-பி அந்தக் குழந்தைக்கு போய்விட்டால் என்ன செய்வது?

100 பேரை பரிசோதித்தால் 1-2 பேர்தான் எச்.ஐ.வி. தொற்றுடன் இருப்பதாக வைத்துக்கொண்டால், 3-4 பேர் ஹெபடிடிஸ் பி தொற்றுடன் இருப்பார்கள். இது தொடர்பாக சரியான தரவுகள் தேவை. எச்.ஐ.வி. மீது காட்டப்படும் கவனத்தைப் போல ஹெபடைட்டிஸ்-பியைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் நமக்குத் தேவை.

ரத்தம் தானமாகப் பெறும் நோயாளி கவனமாக இருக்க முடியுமா?

இப்போது சர்வதேச போக்கு என்னவென்றால், ரத்தம் ஏற்றாமலேயே மருந்துகள் மூலம் சரிசெய்ய முடியுமா என்று பார்ப்பதுதான். ஒருவருக்கு ஹீமோகுளோபின் அளவு 6ஆக இருக்கிறதென வைத்துக்கொள்வோம். மூச்சுத் திணறல், இதயத் துடிப்பில் பிரச்சனை போன்றவையில்லாவிட்டால் அவருக்கு ரத்தம் ஏற்ற வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணைப் பொறுத்தவரை, அவருக்கு ஹீமோகுளோபின் 9ஆக இருப்பதால் ரத்தம் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு யூனிட் ரத்தம் ஏற்றி எந்த பிரயோஜனமும் இல்லை. அதனால், ஹீமோகுளோபின் அளவு 9லிருந்து 10ஆக மாறும் அவ்வளவுதான்.

அவருக்கு 3-4 யூனிட்டுகள் ஏற்றப்பட்டிருக்க வேண்டும். அல்லது சிவப்பு ரத்த அணுக்களை மட்டும் ஏற்றியிருக்கலாம். ஆனால், அந்த வசதி சாத்தூரில் இல்லையென நினைக்கிறேன். உலகம் முழுவதுமே ரத்தத்தை முழுமையாக கொடுக்கும் முறை மாறிவிட்டது. தேவையான பகுதியை மட்டுமே அளிக்கிறார்கள். ரத்தம் ஏற்றுவதன் மூலம் வரும் பிரச்சனைகள் மிகக் குறைவு என்றாலும் அதையும் தடுக்கவே மருத்துவ உலகம் நினைக்கிறது. இருதய அறுவை சிகிச்சையில்கூட இப்போது ரத்தமில்லாமல் செய்ய முயற்சிக்கிறார்கள்.

சில வகையான கல்லீரல் அறுவை சிகிச்சைகள் ரத்தம் ஏற்றாமல் செய்யப்படுகின்றன. முன்பெல்லாம் இருதய அறுவை சிகிச்சைக்கு 8-10 யூனிட் தேவைப்படும். இப்போது 2-3 யூனிட்கள் போதுமானதாக இருக்கிறது. இப்படியாக ரத்தம் ஏற்றும் அளவுகளை குறைத்துக்கொண்டே வருகிறோம். சில சிறிய அறுவை சிகிச்சைகளுக்கு நோயாளியின் ரத்தத்தை முன்பே எடுத்து சேமித்துவைத்து, அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்துகிறோம்.

நோயாளி ஒருவர் மருத்துவமனையில் இருக்கும்போது அவருக்கு ரத்தம் தேவைப்பட்டால் உறவினரிடம் ரத்தம் அளிக்கும்படி கோரப்படுகிறது. அது பாதுகாப்பானதா?

இப்போது அப்படி வலியுறுத்தக்கூடாது என்று சொல்லப்பட்டுவிட்டது. ஆனால், உறவினர்கள் அதே அளவுக்கு ரத்த வங்கியில் ரத்த தானம் செய்வது நல்லது என்றுதான் சொல்வேன். ஏனென்றால் ரத்தத்திற்கான தேவை இருந்துகொண்டேயிருக்கிறது. ஆனால், நோயாளியின் நெருங்கிய உறவினரின் ரத்தத்தை ஏற்றுவது சரியான முறையல்ல.

உறவினரின் ரத்தத்தை ரத்த வங்கியில் சேமித்துவிட்டு, வேறொருவரின் ரத்தத்தை ஏற்றுவதுதான் நல்லது. நெருங்கிய உறவினர்களுக்கு ஒரு குறிப்பிட்ட ‘Anti-bodies’ இருக்கும். சில சமயங்களில் அது மிக மோசமாக வினைபுரிந்தால் உயிருக்கு ஆபத்தாகிவிடும். இது மிக அரிது என்றாலும், இப்படி நடக்கக்கூடிய வாய்ப்பை ஏன் ஏற்படுத்த வேண்டும்? குறிப்பாக கணவன் – மனைவிக்குள் ரத்த பரிமாற்றம் கூடாது.

தமிழ்நாட்டில் தற்போது ரத்தவங்கிகளில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானவையா?

கிட்டத்தட்ட போதுமானவைதான். ஏனென்றால் எல்லாமே உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படிதான் நடக்கின்றன. தமிழகத்தில் இது சிறப்பாகத்தான் பின்பற்றப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஒரு தவறு நடந்துவிட்டது. இதை இந்த கட்டத்திலேயே கண்டறிந்து இனி இப்படி நடக்காமல் செய்ய வேண்டும். அதே ஆய்வகத்தில் இதுபோல இதற்கு முன்பும் பின்பும் தவறுகள் நடந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

பெரிய அளவில் ரத்த தான முகாம்கள் நடத்துவது சரியான முறைதானா?

எவ்வளவு பெரிய முகாம் என்பதைப் பொறுத்தது அது. ஆனால், ஒரே நேரத்தில் லட்சக் கணக்கானவர்களிடம் பெறுவது சரியானதல்ல.

இம்மாதிரி சம்பவங்கள் அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கையை பாதிக்காதா?

உண்மைதான். ஆனால், ஒரு சம்பவத்தை வைத்து இதுபோன்ற மிகப் பெரிய அமைப்பைப் பற்றி முடிவுசெய்யக்கூடாது. அரசு மருத்துமனைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் நோயாளிகள் வருகிறார்கள். பத்தாயிரம் அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன. ஆனால், இப்படி ஒரு சம்பவம்தானே நடந்திருக்கிறது. கடந்த 20-30 வருடத்தில் எனக்குத் தெரிந்து இப்படி நடப்பது இதுதான் முதல்முறை. ஒரு தவறை வைத்து எல்லாவற்றையும் குறைசொல்ல முடியாது.

ஆனால், சில முறைகளை மாற்ற வேண்டுமென நினைக்கிறேன். ஒரு ஹோட்டலில் அறையைப் பதிவுசெய்யவே அடையாள அட்டை வாங்கப்படுகிறது. அதுபோல ரத்த தானம் செய்பவரிடமிருந்து ஏதோ ஒரு அடையாள அட்டையைப் பெற வேண்டும். அப்போதுதான் நோய்த் தொற்று இருந்தால் தொடர்புகொள்ள முடியும். இல்லாவிட்டால், முதல் முறை ஒருவர் ரத்ததானம் செய்ய வந்தால் அவருக்கென தனித்துவம் வாய்ந்த ஒரு அடையாள எண்ணை அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் அவர் ரத்த தானம் செய்ய வரும்போது அந்த எண்ணை அவர் சொல்ல வேண்டும். அவருக்கு நோய்த் தொற்று இருப்பது தெரிந்தால், அந்த எண்ணைச் சார்ந்தவர் மறுபடி ரத்தம் கொடுக்காமல் செய்யலாம். ஆனால், ஒரு நபர் தான் அதற்கு முன்பு ரத்ததானம் செய்ததே இல்லை என்று கூறிவிட்டால், கண்டுபிடிப்பது கடினம்.

தானமாக பெறப்படும் ரத்தம் எத்தனை நாட்களுக்குள் நோயாளிகளுக்கு ஏற்றப்படும்?

பழையதாகிவிடும். ஆனால், ரத்தத்திற்கான தேவை இருந்துகொண்டே இருக்கும். விபத்து, பிரசவம் ஆகியவற்றில் தொடர்ந்து ரத்தம் தேவைப்படுகிறது. ஆகவே, ரத்தம் பழையதாகி வீணாக வாய்ப்பில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!