சம்பூரில் போரை தொடங்க வைத்தது நாங்களே!

யுத்தத்தை ஆரம்பிக்குமாறு, மஹிந்தவுக்கு நாங்களே அழுத்தம் கொடுத்தோம் என்று பெருநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, தெரிவித்துள்ளார். கொலன்னாவையில் முன்னெடுக்கப்பட்ட கால்வாய் வேலைத்திட்டத்தால், வீடுகளை இழந்தவர்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்துக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச் செல்வனின் ​​தொலைபேசி அழைப்புகளுக்​கேற்ற தாளத்துக்கு ஆடிய அரசியல்வாதிகள் அன்றிருந்தனர். இன்று அவ்வாறானதொரு நிலைமை இல்லை.பயங்கரவாதத்துக்கு எதிராக நாங்கள் செயற்பட்டமையால், வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால், எம்மைத் தூற்றக்கூடிய சுதந்திரம் கிடைத்துள்ளது.

மஹிந்த ராஜபக்‌ஷ, 2005ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததன் பின்னர், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முயற்சிக்கவில்லை. பிரபாகரனுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கே முயன்றார். நாட்டின் ஒற்றையாட்சிக்கு எவ்விதமான பங்கமும் ஏற்படாது. அதற்கேற்ற வகையில் அரசமைப்பில் திருத்தங்களும் மேற்கொள்ளப்படாது எனும் இணக்கப்பாடு மட்டுமே எங்கள் இருதரப்பிடமும் இருந்தது.

மஹிந்த ராஜபக்‌ஷ, செயற்பாடுகளில் நாங்கள் அதிருப்தியுற்றிருந்த காலமொன்றிருந்தது. எனினும், பயங்கரவாதத்தைத் தோற்கடித்துக் காண்பித்தோம். அவர் தன்னுடைய குடும்பம், தனது பாதுகாப்பு ஆகியனவற்றுக்காக, பயங்கரவாதிகளுக்குக் கப்பம் கொடுத்து, நிதியளிப்புகளைச் செய்தமையை நாம் நன்கறிவோம். அதனால்தான், சம்பூர் யுத்தத்தை ஆரம்பிக்குமாறு, மஹிந்தவுக்கு நாங்கள் அழுத்தம் கொடுத்தோம் .

அதன்பின்னர் நாங்கள் எதனையும் மஹிந்தவுக்குக் கூறவில்லை. மஹிந்தவுக்கு மிகவும் அருகிலிருந்தவர்கள் அதற்கு விரும்பவில்லை. எனினும், பயங்கரவாதம் கொஞ்சம் கொஞ்சமாகத் தோற்கடிக்கப்பட்டது. அந்தப் பெறுபேறு, இன்று யாருக்குக் கிடைத்துள்ளது?, பங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் சுதந்திரத்தை, வடக்கு மக்களே, இன்று கூடுதலாக அனுபவிக்கின்றனர்.

வடக்கில், யுத்த காலத்தில், சீமெந்து மூடையின் விலை, அரிசி விலை, மண்ணெண்ணை லீற்றரின் விலைக்கும் தற்போதைய விலைக்கும் இடையில் ஒப்பிட்டுப் பார்த்தால், மக்களுக்குக் கிடைத்துள்ள ஜனநாயக உரிமையைக் கண்கூடாகப் பார்க்கமுடியும் , தமிழ்ச் செல்வனின் தொலைபேசித் தாளத்துக்கு ஆடிய அரசியலே, வடக்கில் அன்றிருந்தது.

எனினும், தங்களுடைய அரசியல் இயக்கத்தில், பேரணி செல்வதற்கும், அரசியல் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும், எங்களைத் தூற்றுவதற்கும், ஜனநாயகத்துக்காக அர்ப்பணித்துப் போராடுவதற்கும் சி.வி.விக்னேஸ்வரனுக்குச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றால், அது பயங்கரவாதத்துக்கு எதிரான எங்களுடைய செயற்பாட்டினால் ஆகும் .

மஹிந்தவின் காலத்தில் சமூகத்துக்குச் சுதந்திரம் கிடைத்தமையால், ஜனநாயகத்துக்காக சகலருக்கும் குரல் கொடுக்கக்கூடிய சந்தர்ப்பம் கிட்டியுள்ளது , மஹிந்த கூறுவதற்கெல்லாம் நாங்கள் தலையை ஆட்டிக்கொண்டிருக்கவில்லை. மஹிந்த ராஜபக்‌ஷ, தன்னுடைய மற்றும் தன்னுடைய குடும்பத்தினரின் இரத்தம் மட்டுமே, நாட்டின் இரத்தமென நினைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கையில், அவருடைய ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாட்டுக்கு எதிராகக் குரல்கொடுத்தோம். ராஜபக்‌ஷர்களை யாராலுமே தோல்வியுறச் செய்யமுடியாது என்ற நம்பிக்கையூட்டப்பட்டிருந்த காலத்தில், மஹிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடிப்பதற்கான செயற்பாட்டை முன்னெடுத்தோம் .

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முன்னணி உறுப்பினர்கள், 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக இருக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான முதலாவது நாளன்றே, ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றிருந்தார். மஹிந்த ராஜபக்‌ஷ, வெற்றிபெறுவாரென, அவருடைய குடும்ப அங்கத்தவர்கள் கூட நினைத்திருக்கவில்லை.ஜே.வி.பி மட்டுமே, மஹிந்தவுக்குப் பின்னால் இருந்தது. மஹிந்த வெற்றிபெற்றதன் பின்னர், கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்டவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்து சேர்ந்துகொண்டனர் .

அதேபோல, மைத்திரிபால சிறிசேனவும், ஜனாதிபதியானதன் பின்னர், தன்னுடைய செயற்பாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தைக் காண்பித்தார். அவரைச் சரியான பாதைக்குள் கொண்டுவரவேண்டிய தேவை எங்களுக்கு ஏற்பட்டது , கடந்த ஒன்றரை தசாப்தங்களாக, பிரபாகரன், மஹிந்த மற்றும் மைத்திரி ஆகியோரின் நீதிக்கு எதிராகப் போராடினோம். ஆயுதப் போராட்டத்துக்கு எதிராக இருந்தாலும் சரி, ஏனைய போராட்டங்களுக்கு ஆதரவாக இருந்தாலும் சரி, அவற்றுக்கெல்லாம் நாங்கள் உந்துசக்தியாக இருக்கிறோம் என்பதற்காக நாங்கள் பெருமைப்படுகின்றோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!