ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா பிரேரணை!

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று மாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.மேல் மாகாணசபையின் அமர்வு இன்று நடைபெறவுள்ள நிலையில், அவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.மேல் மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவர் மஞ்சு ஸ்ரீ அரங்கல இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி குற்றச்சாட்டு உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுக்கள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை ஆளுநர் பதவியில் அமர்த்தியதன் மூலம் மேல் மாகாணத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தே இந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனை சமர்ப்பிக்கப்பட உள்ளது என அவர் கொழும்பு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனைக்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களினால் இந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனை முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நடைபெறவுள்ள மாகாணசபை உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தில் மாகாணசபை அமர்வு நிகழ்ச்சி நிரலில் நம்பிக்கையில்லா தீர்மான யோசனையை உள்ளடக்குவது குறித்து கலந்தாலோசிக்கப்படும் என மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் மஞ்சு ஸ்ரீ அரங்கல தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!