தமிழர் நிலங்களை தாரை வார்க்க சதி செய்கிறார் – விக்கி மீது பரபரப்புக் குற்றச்சாட்டு!

தமிழ் மக்களின் நிலங்களை சிங்களவர்களுக்கு தாரைவாா்க்க வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சா் சி.வி.விக்னேஸ்வரன் சதி திட்டம் தீட்டுவதாக ‘அறம் செய்’ அறக்கட்டளையின் இலங்கை கிளை ஆலோசகா் வேலாயுதபிள்ளை பஞ்சலிங்கம் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பு குறித்து சீ.வி.விக்னேஸ்வரன் அண்மையில் ஊடகமொன்றில் கருத்து வெளியிட்டிருந்தார். அவரது கருத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் யாழ்.ஊடக அமையத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை வேலாயுதபிள்ளை பஞ்சலிங்கம் நடத்தினார்.

அங்கு அவர் மேலும் கூறியவது, “வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கான தனது ஆலோசனை என்ற பெயரில் சி.வி.விக்னேஸ்வரன், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளாா். அம்பாறை தோ்தல் தொகுதியை ஊவா மாகாணத்துடன் இணைத்தல், திருகோணமலை கோமரன்கடவை பிரதேசத்தை வடமத்திய மாகாணத்துடன் இணைத்தல், புத்தளம் பிரதேசத்தை மன்னாா் மாவட்டத்துடன் இணைத்தல், ஆகியனவை அவருடைய யோசனையாகும்.

இந்த யோசனை நடைமுறைக்கு வந்தால் வட,கிழக்கு மாகாணங்கள் மட்டுமல்ல, இலங்கையில் ஏனைய இடங்களிலுள்ள தமிழ் மக்களும் தமது இருப்பை இழப்பதுடன், 3 ஆம் தர பிரஜைகளாக மாற்றப்படும் அபாயம் உள்ளது.இவ்வாறு தமிழா்களின் அடிச்சுவடு தெரியாமல் அழிக்கும் நோக்கிலேயே விக்னேஸ்வரன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

திருகோணமலை, கோமரன் கடவை தமிழ் மக்கள் பூா்வீகமாக வாழ்ந்த நிலம், அங்கு பிரதேச சபை தவிசாளராக இருந்தவா் நடராஜா என்ற தமிழா். அவா் பதவியில் இருக்கும்போது சிங்களவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்கானார். அதன்பின்னர் அங்கிருந்து தமிழ் மக்கள் விரட்டப்பட்டனா்.

முன்னாள் முதலமைச்சா் கூறிய எல்லா யோசனைகளிலும் தமிழ் மக்களுடைய பூா்வீக வாழ் நிலங்கள் அபகரிக்கப்படும் நிலைமை காணப்படுகின்றது. தமிழ் மக்கள் 1948ஆம் ஆண்டுக்கு முன்னா் இருந்த வட,கிழக்கை கேட்டுக் கொண்டிருக்கின்றாா்கள். அதற்காக எத்தனையோ இழப்புக்கள், உயிா் அழிவுகளுக்கு பின்னரும் தமிழ் மக்கள் நிலத்தை கேட்டு போராடிக் கொண்டிருக்கின்றாா்கள்.

இவ்வாறான நிலையில் தமிழ் தாய்க்கு பிறந்தவா்கள், தமிழ் மீதும் பற்றுள்ளவா்கள் இவ்வாறான ஒரு கருத்தை கூறியிருக்க மாட்டாா்கள். முதலமைச்சருடைய கட்சியிலுள்ள ஒவ்வொருவரும் அதிலிருந்து வெளியே வாருங்கள். இல்லையேல் எல்லோரும் துரோகி பட்டத்தை சுமப்பீா்கள்” என வேலாயுதபிள்ளை தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!