கொழும்பு கடற்படைப் பயிற்சி ஆரம்பம் – 17 போர்க் கப்பல்கள், படகுகள் பங்கேற்பு

சிறிலங்கா கடற்படை புதிதாக ஆரம்பித்துள்ள, கொழும்பு கடற்படை பயிற்சி -2019 ( CONEX) நேற்று ஆரம்பமாகியுள்ளது. எஸ்எல்என்எஸ் சிந்துரால என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலில் இதன் ஆரம்ப நிகழ்வு நேற்றுக்காலை இடம்பெற்றது.

இந்தக் கடற்படைப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படையின், 7 போர்க்கப்பல்களும், சிறிலங்கா கடலோரக் காவல்படையின் இரண்டு கண்காணிப்புக் கப்பல்களும், கடற்படையின் 8 அதிவேகத் தாக்குதல் படகுகளும் பங்கேற்றுள்ளன.

சிறிலங்கா கடற்படையின் போர்க்கப்பல்களான, எஸ்எல்என்எஸ் சிந்துரால, எஸ்எல்என்எஸ் சாகர, எஸ்எல்என்எஸ் சமுத்ர, எஸ்எல்என்எஸ் பிரதாப, எஸ்எல்என்எஸ் சுரனிமல, எஸ்எல்என்எஸ் மிஹிகாத, எஸ்எல்என்எஸ் ரத்னதீப ஆகியனவும், சிறிலங்கா கடலோரக் காவல்படையின், சுரக்ச, சமுத்ரரக்ச ஆகியனவும் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டன.

கப்பல்களைக் கையாளுதல், கடலில் இரவுநேரச் சூட்டுப் பயிற்சி, கடலில் விநியோகங்களை மேற்கொள்ளுதல், தொடர்பாடல் உள்ளிட்ட பயிற்சிகள் இடம்பெறுகின்றன.

இந்தப் பயிற்சிகள் நாளையுடன் முடிவடையவுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!