“பாரத ரத்னா விருது வழங்குவதில் புறக்கணிக்கப்படும் தலித்துகள், தமிழகம்” – திருமாவளவன் குற்றச்சாட்டு.

இதுவரை அம்பேத்கரைத் தவிர தலித் சமூகத்தைச் சேர்ந்த வேறு எவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி. “இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த நானாஜி தேஷ்முக் என்பவரது பெயரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. நானாஜி தேஷ்முக் தீவிரமான ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவர். ஜனசங்கம் என்ற அரசியல் கட்சியை ஆர்.எஸ்.எஸ். துவக்கிய போது அதை மக்களிடம் பரப்புவதில் முக்கிய பங்காற்றியவர். 2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் நடத்தப்பட்டபோது நானாஜி தேஷ்முக் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அப்போது அவர் அதைக் கண்டிக்கவில்லை. வாஜ்பாயியுடன் முரண்பட்டிருந்த அவர் அன்றைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை மறைமுகமாக ஆதரித்தார்.

அதுபோல, 1984-ஆம் ஆண்டு தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டபோது அதை அவர் ஆதரித்ததாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. அத்தகைய ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது அந்த விருது உருவாக்கப்பட்ட நோக்கத்துக்கே எதிரானதாகும். இந்திய நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது இதுவரை 48 பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அந்தப் பட்டியலைப் பார்த்தால் முன்னேறிய சாதியினரே 60 சதவீதம் அந்த விருதைப் பெற்றுள்ளனர். பாரத ரத்னா விருதினை மொழி, இன, மத, சாதி, பாலின பாகுபாடு இல்லாமல் வழங்க வேண்டும் என அது உருவாக்கப்பட்டபோது கூறப்பட்டுள்ளது.

ஆனால் அந்த நோக்கத்துக்கு மாறாகவே அந்த விருதுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை அம்பேத்கரைத் தவிர தலித் சமூகத்தைச் சேர்ந்த வேறு எவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை.

பலமுறை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட விஞ்ஞானி மேக்நாத் சாஹா, அரசியல் தலைவர் கன்ஷிராம், முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் முதலான தகுதிவாய்ந்த பலர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலேயே புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

தந்தை பெரியார், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா வழங்கவேண்டும் என தமிழகத்தின் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இது ஏற்கப்படவில்லை. பாரத ரத்னா விருது மட்டுமின்றி பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளிலும் கூட தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.” என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறது அந்நாளிதழ்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!