வடக்கு , கிழக்கு அபிவிருத்திக்கு நிதியை வழங்குவோம்! ரஞ்சித் மத்துமபண்டார

வரவு- – செலவுத்திட்டத்தை இலக்காகக் கொண்டு அரசாங்கம் எதையும் செய்யவில்லை.எனினும், வடக்கு , கிழக்கி அபிவிருத்திக்கு அவசியமான நிதியை வழங்குவோம் என பொதுநிர்வாக இடர்முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

வடக்கு , கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கு உதவுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. நாம் அதனை மேற்கொள்வோம். அதற்குத் தேவையான நிதியையும் வழங்குவோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் தொடர்ந்தும் வாக்களித்து வந்துள்ளனர். அதனால் மைத்திரிபால சிறிசேன எமது பொது வேட்பாளராக களமிறங்கியதால் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் அவருக்கு கிடைத்தன. இந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சியென்பது அனைத்து இன, மத மக்களையும் கொண்ட கட்சியாகும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவசியமான நேரத்தில் சிறந்த பொருத்தமான ஒரு வேட்பாளரை நாம் தீர்மானிப்போம். வெளியிலிருந்து வேட்பாளரொருவரைக் கொண்டு வருவது ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கமல்ல. நேரம் வரும்போது நாம் சரியான முடிவை எடுப்போம்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதாக கடந்த தேர்தல்களின் போது நாம் உறுதியளித்திருந்தோம். அரசியலமைப்பை பற்றி பலரும் பேசினர். 13+ பற்றி மஹிந்த ராஜபக்ஷ பேசினார். தற்போதுள்ள அரசியலமைப்பில் சில சில திருத்தங்கள் அவசியமென்பதை எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவரப் போவதில்லை. எனினும் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் எவரும் தமது யோசனையை முன்வைக்கலாம். கருத்துக்களையும் கூறலாம். சிலர் இதில் உள்ளடக்கப்படும் விடயங்கள் தொடர்பில் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அரசியலமைப்பு இன்னும் சட்டமாக்கப்படவில்லை. அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதென்றால் 2/3 பெரும்பான்மை அவசியம். பிரதான கட்சிகள் இரண்டும் இணங்கினால் மாத்திரமே 2/3 பெறமுடியும் . இதுதொடர்பில் எவரும் வீணே பயங்கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!