அமெரிக்க நீதிமன்றில் இன்று சரணடைகிறார் மகிந்தவின் மைத்துனர்!

நிதி மோசடி தொடர்பில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும், மகிந்த ராஜபக்சவின் மைத்துனருமான ஜாலிய விக்கிரமசூரிய, இன்று அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் இலங்கைக்கான புதிய தூதரகக் கட்டடத்தைக் கொள்வனவு செய்வதில் பண மோசடி செய்தமை, குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தை மோசடி செய்தமை உட்பட ஜாலியவுக்கு எதிரான ஐந்து குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. தற்பொழுது தலைமறைவாயிருக்கும் ஜாலிய விக்கிரமசூரிய இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வரும்போது சரணடைவார் எனத் தெரியவருகிறது.

அமெரிக்காவின் சட்டத்துறையிலிருந்து ஜாலிய தொடர்ந்தும் தப்பிக்க முடியாதென அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த வழக்கில் சட்டத்தரணிகளான சியா முஸ்தபா மற்றும் அரவிந்த்.கே.லால் ஆகியோர் அமெரிக்க அரசாங்கத்தின் சார்பில் ஆஜராகின்றனர்.

வெளிநாட்டுத் தூதுவருக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்த முதலாவது சம்பவம் இது என்பதுடன், இலங்கைத் தூதுவர் ஒருவருக்கு வெளிநாட்டில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டமையும் இதுவே முதற் தடவையாகும்.

நிதி மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்ப ட்டிருக்கும் ஜாலிய விக்கிரமசூரியவை விடுதலை செய்து, அவரிடமிருந்து ஏனைய மோசடிகள் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொள்வது,பற்றி இடம்பெற்ற மின்னஞ்சல் பரிமாற்றம் தொடர்பிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. அவருக்கு வழங்கப்பட்ட இந்த சந்தர்ப்பத்தை அவர் ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பது உறுதிப்படுத்தப்படாதபோதும், இன்று அவருக்கு எதிரான வழக்கில் இவர் குற்றவாளியா? இல்லையா? என்பது நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!