மன்னார் புதைகுழி பரிசோதனை அறிக்கை – பெப்ரவரி மூன்றாம் வாரத்தில் நீதிமன்றில் தாக்கல்!

மன்னார்- மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தொடர்பாக, புளோரிடாவில் மேற்கொள்ளப்படும் காபன் பரிசோதனை அறிக்கை பெப்ரவரி மாதம் 3ஆம் வாரமளவில் மன்னார் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

காணமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலம் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது. மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷவின் விசாரணை அறிக்கை ஒன்றும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட 6 மனித எச்சங்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக அமெரிக்காவின் புளோரிடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் குறித்த மனித எச்சங்களின் மாதிரிகள் கதிரியக்க காபன் பரிசோதனை ஊடாக கால நிர்ணயம் செய்யப்படவுள்ளன.

இதனூடாக எலும்புக்கூடுகளாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் எந்தக் காலப்பகுதியில் இறந்தார்கள் என்பது தொடர்பில் அறிய முடியுமென அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரையில் 300 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, அவற்றில் 27 சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் உள்ளடங்குகின்றன.

மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்கா புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா நிறுவனத்தில் காபன் பரிசோதனைக்காக கடந்த 25 ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!