“எங்கள் சாதனைகளை வேறு அரசு செய்ய 25 ஆண்டுகள் தேவை” – மோடி பெருமிதம்.

JAPAN-INDIA/
குஜராத் மாநிலம் சூரத் நகரிலுள்ள விமான நிலையத்தை ரூ. 354 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்வதற்காகவும், புதிய முனையம் கட்டுவதற்கும் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். அதன்பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மத்தியில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அரசுகள் உள்கட்டமைப்பை மேம்படுத்த 25 ஆண்டுகள் தேவைப்பட்ட நிலையில், பாஜக அரசு 4 ஆண்டுகளில் இதனை செய்து முடித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக தொங்கு பாராளுமன்றங்கள் அமைந்ததால் கொள்கை ரீதியாக தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் முந்தைய அரசுகள் திணறி வந்தன. மக்கள் எங்களை முழுமையான மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர வைத்ததால் நாங்கள் பல காரியங்களை நிறைவேற்ற முடிந்தது. மத்தியில் மற்றொரு முழு பெரும்பான்மையான அரசு அமைய வேண்டும். அத்தகைய அரசால் மட்டுமே கடுமையான மற்றும் வலுவான முடிவுகளை எடுக்க முடியும்.

முந்தைய கூட்டணி ஆட்சிகளில் முடிவு எடுக்க முடியாமல் திணறியதால் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டது. மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் அமைந்த பா.ஜ.க. அரசு எவ்வாறு சிறப்பாக செயல்பட முடியும் என்பதை மக்களுக்கு எடுத்துக் காட்டி உள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 25 லட்சம் வீடுகளே கட்டப்பட்டன. எங்களது ஆட்சியில் 4 ஆண்டுகளிலேயே ஒரு கோடியே 30 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான எங்களது அரசு கடந்த 4 ஆண்டுகளில் செய்து முடித்த பணிகளை வேறொரு அரசு செய்வதற்கு 25 ஆண்டுகளாவது தேவைப்படும். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ரியல் எஸ்டேட் துறையில் கருப்பு பணம் ஒழிக்கப்பட்டு, நடுத்தர மக்களும் வீடு வாங்க முடிந்தது என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, நிகழ்ச்சியை படம் பிடித்துக் கொண்டிருந்த கிஷன் ரமோலியா என்ற ஒளிப்பதிவாளர் திடீரென மயக்கம் அடைந்ததால் பிரதமர் மோடி பேசுவதை நிறுத்தினார். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து அவர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!