வெசாக்கிலும் ஏமாற்றினார் ஜனாதிபதி! – ஆனந்த சுதாகரனை சிறையில் சந்தித்த பிள்ளைகள்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் அரசியல் கைதி ஆனந்த சுதாகரன் நேற்று விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவர் விடுதலை செய்யப்படவில்லை என அருட் தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

அதேவேளை நேற்று கொழும்பு மகசீன் சிறைச்சாலைக்குச் சென்ற ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகளும், அவரை பார்வையிட்டு உரையாடி, கண்ணீர் சிந்தி அழுதனர்.

சித்திரைப் புதாண்டுக்கு முன்னர் ஆனந்த சுதாகரன் விடுதலை செய்யப்படுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார். ஆனால் சித்திரைப் புத்தாண்டு முடிவடைந்து இரண்டு வாரங்கள் சென்ற நிலையிலும் அவர் விடுதலை செய்யப்படவில்லை.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு தமது, தந்தை விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கையில், இரு பிள்ளைகளும் கொழும்புக்கு வந்ததாகவும், ஆனால் விடுதலை செய்யப்படுவதற்கான உத்தரவு, சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் இருந்து கிடைக்கவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் கூறியதாகவும் அருட்தந்தை சக்திவேல் கவலையுடன் தெரிவித்தார்.

இதனால், ஏமாற்றம் அடைந்த நிலையில் இரண்டு பிள்ளைகளும் மீண்டும் கிளிநொச்சிக்கு சென்று விட்டதாகவும், ஜனாதிபதி இரண்டு பிள்ளைகளையும் ஏமாற்றிவிட்டார் எனவும் அருட்தந்தை சக்திவேல் குற்றம் சுமத்தினார்.

அதேவேளை சிறைச்சாலையில் தமது தந்தையை பார்வையிட்ட இரண்டு பிள்ளைகளும் கண்ணீர் விட்டு அழுது புலம்பியதாகவும், தங்களுக்கு அப்பா வேணும் என்று சிறைச்சாலை அதிகாரிகளிடம் வலியுறுத்தி உருக்கமாக கோரிக்கை விடுத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!