சுவிசில் இருந்து வாள்வெட்டுக் காரர்களை ஏவி விட்ட பெண்! – கொக்குவில் சம்பவத்தின் பின்னணி

கொக்குவில் பகுதியில் நேற்று நடன ஆசிரியை மற்றும் அவரது தாய் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலுக்கு, சுவிற்சர்லாந்தில் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொக்குவில் பகுதியில் நேற்று பிற்பகல் நடன ஆசிரியயை மற்றும் அவரது தாய் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த பொலிஸார், தாக்குதலாளிகளின் இலக்கு தவறியுள்ளதாகவும் அவர்கள் தாக்க வந்த இலக்கு நடன ஆசிரியையின் தங்கை எனவும் குறிப்பிட்டனர்.

சம்பவம் நடைபெற்ற போது நடன ஆசிரியையின் தங்கையும் வீட்டில் இருந்துள்ளார். எனினும் தாக்குதல் நடைபெற்ற போது தன்னை சுதாகரித்துக் கொண்டு அறை ஒன்றில் அவர் ஒளிந்து கொண்டதாக விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள, தனது கணவனின் முதலாவது மனைவி தான் காரணம் எனவும், சில தினங்களுக்கு முன்னர் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருமண முறிவு பத்திரத்தில் கையெழுத்திடுமாறு அவர் அச்சுறுத்தினார் என்றும், கூறினார்.

இதனால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து போது கணவரின் வேண்டுகோளின் படி சமாதானமாக சென்றதாகவும், மீண்டும் இவ்வாறு சுவிஸ் நாட்டு பெண் தன்னை தாக்குவதற்கு கூலிக்கு நபர்களை அமர்த்தி தன்னை கொலை செய்ய முயற்சித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அச்சுவேலியை பிறப்பிடமாக கொண்ட 32 வயதுடைய இளைஞன் சுவிசில், உள்ள வயது கூடிய பெண் ஒருவரை திருமணம் முடித்திருந்தார். இலங்கைக்கு விடுமுறைக்கு வந்த போது கொக்குவிலில் உள்ள நடன ஆசிரியையின் தங்கையை அவர் மறு மணம் செய்துள்ளார். இந்த விடயம் முதலாவது மனைவிற்கு தெரியவந்ததை அடுத்து பிரச்சினை எழுந்து தற்போது வெட்டுச்சம்பவத்தில் முடிவடைந்துள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த நடன ஆசிரியையான 34 வயதுடைய நாகராசா யாழினி, அவரது தாய், நாகராசா லீலா (வயது-50) ஆகியோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!