அரசில் இருந்து விலகுமா மனோ கூட்டணி? – இன்று முடிவு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தமிழ் முற்போக்கு முன்னணி இன்று சந்திக்கவுள்ளது. அலரி மாளிகையில் இன்று மாலை 4 மணியளவில் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. இதில் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் பழனி திகாம்பரம் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளம் 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டுமென அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. எனினும், போராட்டங்களை புறக்கணித்து 700 ரூபாய்க்கு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ் முற்போக்கு முன்னணி, சம்பள பிரச்சினையில் நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்காவிட்டால் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவோம் என அண்மையில் குறிப்பிட்டது.

இதன் பின்னணியில் இன்றைய சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இன்றைய சந்திப்பில் சாதகமான தீர்மானம் கிடைக்காவிட்டால் தமிழ் முற்போக்கு முன்னணியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்களும் ஹட்டன் வீதியில் அமர்ந்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராடுவோம் என நேற்று தமிழ் முற்போக்கு முன்னணியின் பிரதி தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்திருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!