51 நாள் ஆட்சியிலேயே அதிகளவு மாவீரர் தின நிகழ்வுகள்!

51 நாட்கள் நீடித்த ஆட்சிக் காலத்தில் தான் வடக்கில் மாவீரர் தின நிகழ்வுகள் அதிகளவு நடைபெற்றதாக நெடுஞ்சாலைள் மற்றும் வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியில் சிலர் நாட்டின் இறைமைப் பற்றி பேசுகின்றார்கள், தேசாபிமானம் பற்றி பெரிதாகக் கதைக்கின்றார்கள் அவர்களுக்கு அதிகாரம் இருக்கும் போதும் இல்லாத போதும் செயல்படும் விதம், கதைக்கும் விதம்பற்றி மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். 51 நாட்கள் இந்த நாட்டை நிர்வாகம் செய்த வேளையில்தான் அதிகளவு மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் பாதுகாப்பு அமைச்சு, பொலிஸ் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் இருந்த போதும் அவர்கள் ஒரு வார்த்தையும் கூறவில்லை. அந்த 51 நாளில்தான் உயர் இராணுவ அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டார். பெரிதாக இராணுவ வீரர்கள் பற்றி கதைக்கின்றார்கள். அதிகாரம் இருக்கும் போது அந்த 51 நாட்களில் ஒரு அமைச்சராவது இராணுவ வீரர்கள் பற்றி கதைக்கவில்லை.

இராணுவ வீரர்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அவை பற்றிய தகவல்களை அறிய டயஸ்போராக்களின் ஆலோசனைகளை பெறும்படி அண்மையில் பாதுகாப்பு செயலாளர் கூறியிருந்தார்.

தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மொட்டு கட்சியும் ஒன்றாக இணைந்து செயல்படுவதாக கூறுகின்றார்கள். இவர்கள் தேர்தலில் வெற்றி பெற மக்களுக்கு எதை எதையோ கூறுகின்றார்கள். எதிர்க்கட்சியின் நோக்கம் இன்று முழு நாடுமே அறியும். ஐக்கிய தேசியக் கட்சி உண்மை கசப்பானாலும் நாட்டு மக்களுக்கு சரியானதையே தெரிவிக்கும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!