பப்ஜி கேமுக்கு அடிமையான வாலிபர் தற்கொலை- காரணம் இதுதான்

மும்பையில் பப்ஜி கேமுக்கு அடிமையான வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மும்பையில் நேரு நகரில் உள்ள குர்லா பகுதியில் 18 வயதுடைய வாலிபர் ஒருவர், பெற்றோரிடம் பப்ஜி கேம் விளையாடுவதற்காக ரூ.37000 மதிப்புடைய விலை உயர்ந்த செல்போன் ஒன்றைக் கேட்டுள்ளார். இதனை பெற்றோர் வாங்கித்தர மறுப்பு தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து பெற்றோருக்கும் வாலிபருக்கும் இடையே நடைபெற்ற கடும் வாக்குவாதத்தினை தொடர்ந்து பெற்றோர் ரூ.20,000-க்குள் செல்போன் வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்து அந்த வாலிபர் வீட்டின் சமையல் அறையில் உள்ள மின்விசிறியில், கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பப்ஜி என்பது மிகவும் ஆபத்தான ஆன்லைன் மல்டிபிளேயர் விளையாட்டு ஆகும். இதில் 100 வீரர்கள் போர்க்களத்தில் போராட வேண்டும். இதில், ஒருவர், இருவர், நால்வர் என எண்ணிக்கையில் அணி அணியாக சேர்ந்து விளையாடலாம். இறுதியாக உயிர்தப்புபவர் வெற்றி பெறுவார்.

இந்நிலையில் இந்த ஆன்லைன் விளையாட்டினால் பல குழந்தைகள் தேர்வுகளில் கவனம் செலுத்துவது குறைந்து வருகிறது எனவும், இதனை தடை செய்ய வேண்டும் எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் சமீபத்தில் பப்ஜி விளையாட்டை தடை செய்யுமாறு 11 வயதுடைய மாணவன், தனது தாயின் உதவியோடு மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!