சுமந்திரனைத் திணறடித்த பங்குத் தந்தை!

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அரசியல் கருத்தரங்கு ஒன்றில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம், சாவகச்சேரி பங்குதந்தை அருட்பணி றெக்ஸ் சௌந்தரா காரசாரமான கேள்விகளை எழுப்பி திணறடித்தார்.

“கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இங்கு இருப்பதன் காரணமாக கூட்டமைப்பை முன்னிலைப்படுத்தி எனது பேச்சை ஆரம்பிக்கின்றேன். இவ்வளவு காலம் திரும்பி பார்க்காத மக்களை இன்று திரும்பி பார்ப்பதன் காரணம் என்ன? எனது பார்வையில் இந்த மனமறியும் அரசியல் களம் என்பது எதிர்வரும் தேர்தலுக்காக நாடிபிடித்து பார்க்கும் வேவு வேலையிது.

அல்லது மாற்று தலைமை ஒன்று உருவாகி வருகின்ற நிலையில் உங்கள் தலைமையை தக்கவைத்து கொள்ளவதற்காக மேற்கொள்ளப்படும் நகர்வு இது.

இன்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று தலைமை ஒன்று மிக வேகமாக உருகிவருகின்றது.< இது குறித்து சாதகமான, எதிர்க்கருத்துகள் வெளிவருகின்றன. அவை எப்படியாக இருந்தாலும் என்னுடைய கேள்வியென்பது இந்த மாற்று தலைமை உருவாக காரணம் என்ன? கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பமானது இரண்டு பெரும்பான்மை கட்சிகளிடையே காணப்பட்ட அதிகார போட்டியாகும்.இந்த முரண்பாட்டை தீர்த்து வைத்ததில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்கு முதன்மையானதாக இருந்துள்ளது. பதவியிழந்த பிரதமர் மீண்டும் தன் பதவியை பெற்றுக்கொண்டார். பதவியிலிருந்து இறக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவரானார். இந்த விடயத்தில் வில்லங்கமாக மூக்கை நுழைத்த கூட்டமைப்பினருக்கு பதவி பறிப்போனது. இது தமிழ் மக்களாகிய எங்களுக்கு பெரும் அவமானமாகிபோனது. உலகிலே ஒரேயொரு எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதும், தாம் சார்ந்த மக்களை ஏமாற்றியதும் என்றால் அது தமிழ் தேசியக் கூட்மைப்பு தான். இந்த பெருமைக்கு சொந்த காரர்கள் நீங்களே. ஏனென்றால் தூக்கியெறிப்பட்ட பிரதமரை மீண்டும் பதவியில் அமர்த்த நீதிமன்றம் சென்ற உங்களால் காணாமல் ஆக்கப்பட்ட ஒரு உறவை மீட்கமுடியாமல் போனது ஏன்? இதற்கு ஒரேயொரு காரணம் உங்கள் சுயநலம் மட்டுமே” என்று அவர் மேலும் கூறியுள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!