சனிக்கிழமைக்குப் பின் அதிகரித்த ஏரிஎம்.மோசடிகள்! – மத்திய வங்கி எச்சரிக்கை

வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரங்கள் மூலம் மோசடி முறையில் பணம் எடுக்கப்படுவது தொடர்பாக, மத்திய வங்கிக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்ய மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த விசாரணை தொடர்பான முழுமையான அறிக்கை நாளை வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையிலுள்ள தன்னியக்க இயந்திரங்கள் ஊடாக நிதி மோசடி இடம்பெற்று வருவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு சொந்தமான தன்னியக்க இயந்திரங்களில் கருவியொன்றைப் பொருத்தி அதனூடாக வாடிக்கையாளர்களின் தரவுகள் குழுவொன்றினால் சேகரிக்கப்பட்டுள்ளன.அந்த தரவுகளைப் பயன்படுத்தி போலியான அட்டைகளை தயாரித்து பணம் பெறப்படுவதாக குற்றத்தடுப்புத் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி கடந்த சனிக்கிழமை முதல் ஏ. டி. எம். (ATM) இயந்திரங்கள் மூலம் மோசடி முறையில் பணம் எடுக்கப்படுவதாக பல்வேறு தனியார் மற்றும் அரச வங்கிகளிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

ஈ.எம்.வி சிப் (EMV Chip) தொழில்நுட்பத்தை பயன்படுத்தாத வங்கிகளிலிருந்து மட்டுமே இவ்வாறான மோசடி இடம்பெற்றுள்ளதாக, இது தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளன.மேலதிக பாதுகாப்பின் நிமித்தம் ஈ.எம்.வி சிப் (EMV Chip) தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் கூறப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமல்ல என்பதால் சில வங்கிகள் இந்த தொழில்நுட்பத்தை இதுவரை பயன்படுத்தாமல் உள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!