சிறிலங்காவிடம் மனித உரிமைகளை அமெரிக்கா வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் கொலம்பகே

சிறிலங்காவில் பணியாற்றும் போது, மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது என்று சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜெயந்த கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா விடுதியில் நேற்று பாத் பைன்டர் பவுண்டேசனின் ஏற்பாட்டில் இந்தோ- பசுபிக் பிராந்தியம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதில் பங்கேற்ற அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியாவுக்கான பதில் முதன்மை பிரதி உதவிச் செயலர் தோமஸ் எல் வஜ்டா உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகளிடமே, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி மேற்கண்ட கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

“சிறிலங்கா ஆபத்தான நிலைமையில் இருக்கிறது. இதுபோன்றதொரு நிலைமையை இதற்கு முன்னர் நாங்கள் எதிர்கொண்டதில்லை.

எமது பொருளாதார வளர்ச்சி ஆப்கானிஸ்தானை விட கொஞ்சமே அதிகமாக இருக்கிறது. 30 ஆண்டுகாலப் போரின் போது இருந்ததை விட இது மோசமான நிலை. போரின் போது கூட பொருளாதாரம் வளர்ச்சி கண்டது.

சிறிலங்காவுடன் அமெரிக்காவின் ஈடுபாடு மிக முக்கியமானது. சிறிலங்கா போன்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்றும் போது, அமெரிக்கா மனித உரிமைகள், ஜனநாயகத்தை வலியுறுத்துகிறது.

30 ஆண்டுகால மோதல்களின் போது ஏற்பட்ட பாரிய இழப்புடன் ஒப்பிடுகையில், இப்போது, மக்களின் தனிமனித பாதுகாப்பு அதிகரித்துள்ளது.

2009 மே மாதத்துக்கு முன்னர் நாங்கள் மாதம் தோறும் குறைந்தது 250 உயிர்களை இழந்தோம். இப்போது எத்தனை பேரை இழக்கிறோம்?

ஜனநாயகம், எமக்கு எதைக் கொடுத்தது? குறுகிய வாதம், பிளவுகள், இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள், உயரடுக்கின் கட்டுப்பாடு இவற்றைத் தான் ஜனநாயகம் எமக்கு கொடுத்தது.” என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமெரிக்காவின் பதில் முதன்மைப் பிரதி உதவிச்செயலர் வஜ்டா, சிறிலங்காவில் எனது குறுகிய பயணத்தின் போது, இந்தக் கருத்தை என்னிடம் வலியுறுத்திய முதலாவது ஆள் கொலம்பகே அல்ல.” என்று குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!