பாகிஸ்தானைத் தனிமைப்படுத்த சிறிலங்காவையும் அழைத்த இந்தியா

காஷ்மீரில் நேற்று முன்தினம் இந்தியாவின் துணை இராணுவத்தின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இந்திய அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.

காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 50 வரையான துணை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாக கொண்டு செயற்படும், ஜெய்ஷ் ஈ மொகமட் என்ற தீவிரவாத அமைப்பே என்று குற்றம்சாட்டியுள்ள இந்தியா, இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் உதவியதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் ஒரு நகர்வாக, புதுடெல்லியில் உள்ள 25 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு நிலைமைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

சிறிலங்கா, ஜேர்மனி, தென்கொரியா, ஜப்பான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், கனடா, பிரித்தானியா, ரஷ்யா, இஸ்ரேல், பூட்டான், சுவீடன், உள்ளிட்ட 25 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்திய வெளிவிவகாரச் செயலர் நிலைமைகளைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!