பிரான்ஸ் திருப்பி அனுப்பிய 8 பேரை தடுத்து வைக்க உத்தரவு

ரியூனியன் தீவில் இருந்து பிரெஞ்சு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்ட 64 பேர் எட்டுப் பேரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 சிறுவர்கள், 8 பெண்கள் உள்ளிட்ட 70 இலங்கையர்கள் சட்டவிரோதமாக சிலாபத்தில் இருந்து. கடந்த ஜனவரி 24ஆம் நாள் ரியூனியன் தீவுக்கு படகு ஒன்றில் பயணம் மேற்கொண்டனர்.

கடந்த 4ஆம் நாள் இந்தப் படகு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள ரியூனியன் தீவைச் சென்றடைந்தது. அங்கு 70 பேரும் அரசியல் தஞ்சம் கோரியிருந்தனர். இவர்களில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 52 தமிழர்களும் அடங்கியிருந்தனர்.

இவர்களில் 6 பேர் தவிர, ஏனைய 64 பேரையும், பிரான்ஸ் அதிகாரிகள் சிறப்பு விமானம் ஒன்றின் மூலம், 70 பாதுகாப்பு அதிகாரிகளின் துணையுடன், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு நேற்றுமுன்தினம் அனுப்பி வைத்திருந்தனர்.

திருப்பி அனுப்பப்பட்டவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைக்குப் பின்னர் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் நேற்று நிறுத்தப்பட்டனர்.

அவர்களில் 8 பேரைத் தடுத்து வைக்கவும் ஏனையவர்களை விடுதலை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!