பொன்சேகாவின் பதவியைக் கெடுத்த காவல்துறை அதிகாரி

இராணுவ அதிகாரி ஒருவரை, சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்க வேண்டாம் என்று பிரதி காவல்துறை மா அதிபர் ஒருவரே சிறிலங்கா அதிபருக்கு கூறியுள்ளார் என்று அமைச்சர் நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், அவருக்கு அந்தப் பதவி வழங்கப்படாதமை ஐதேகவினர் பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியதாகவும், ஆனால் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதனை நிராகரித்து விட்டார் என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

இந்த நிலையில் இதுபற்றிக் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் நவீன் திசநாயக்க, இராணுவ அதிகாரி ஒருவரை இந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டாம் என்று குறிப்பிட்ட பிரதி காவல்துறை மா அதிபர் ஒருவர் சிறிலங்கா அதிபரிடம் கோரியிருந்தார் என்றும் அது தனக்குத் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!