அமெரிக்காவில் பனியில் சிக்கிய ரெயில் 2 நாட்களுக்கு பின் மீட்பு

அமெரிக்காவின் கடும் பனிப்பொழிவில் சிக்கிய ரெயில் ஒன்று, 2 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சியாட்டில்- லாஸ் ஏஞ்சல்ஸ் வழித்தடத்தில் பயணிகள் ரெயில் கடந்த ஞாயிறு அன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது பனிப்பொழிவு மிக அதிகமாக காணப்பட்டது. ரெயில் பாதையில் மரக்கிளைகள் விழுந்து கிடந்துள்ளன. இதனையடுத்து ரெயில் சட்டென நின்றது. இதில் ரெயிலின் எஞ்சின் முற்றிலும் பழுதானது.

பயணிகள் அனைவரும் ரெயில் திடீரென நின்றதை உணர்ந்து பதற்றம் அடைந்தனர். ரெயில்வே துறையினருக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சிக்கிய ரெயில் எஞ்சின், ரெயில்வே ஊழியர்களால் அன்று இரவு பழுது பார்க்கப்பட்டது. ரெயிலை உடனடியாக இயக்க முடியவில்லை.

இருப்பினும் ஊழியர்கள் விடாது 36 மணி நேரம் நிதானத்துடனும், மிகுந்த கடமை உணர்வுடனும் போராடி எஞ்சின் கோளாறை சரி செய்தனர். இதன் மூலம் ரெயில் நேற்று காலை மீண்டும் இயங்க துவங்கியது.

ரெயில் தண்டவாளத்தை விட்டு நகர முடியாமல் நின்றபோது, தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டதால் ரெயிலில் பயணம் செய்த 182 பயணிகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிகழ்வினை பயணிகள் புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!