டிரம்ப் மீது பாலியல் வழக்கு தொடர்ந்த முன்னாள் பெண் ஊழியர்.

அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் மீது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உள்பட பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டுகளால் டிரம்புக்கு பெண்களின் ஆதரவு வெகுவாக குறைந்தது. எனினும் அவர் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனார். அதன் பின்னரும் சில முறை டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் 2016-ம் ஆண்டு தேர்தலின் போது டிரம்பின் பிரசாரக் குழுவில் பணியாற்றிய ஆல்வா ஜான்சன் என்ற பெண், பிரசாரத்தின் போது டிரம்ப் தன்னிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக குற்றம் சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் டிரம்ப் மீது புளோரிடா மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தன்னுடைய மனுவில், “2016-ம் ஆண்டு புளோரிடா மாகாணத்தில் உள்ள டம்பா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு வந்த டிரம்ப், என்னை வலுக்கட்டாயமாக முத்தமிட்டார். பெண்களுக்கு எதிரான டிரம்பின் அத்துமீறல் நடவடிக்கையில் நானும் பாதிக்கப்பட்டேன்” என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!