நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மீது சிஐடி விசாரணை

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் ரவி வைத்யாலங்கார உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சிலருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகள் சிலர், சந்தேக நபர்களுக்கு இரகசியங்களை வெளியிட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சிலர் அண்மையில் திடீரென வசதி படைத்தவர்களாக மாறியுள்ளது குறித்தும் விசாரிக்கப்படவுள்ளது.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் ரவி வைத்யாலங்கார மற்றும் அவருக்கு நெருக்கமான அதிகாரிகளை விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைத்துள்ளது.

காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் ரவி வைத்யாலங்காரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க கடந்த செவ்வாயன்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மிக் போர் விமானக் கொள்வனவு தொடர்பான விசாரணைகள் குறித்த இரகசியங்களை சிங்கப்பூரைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களுக்கு வெளியிட்டார் என்று அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கடந்த ஜனவரி 16ஆம் நாள், பிரதி காவல்துறை மா அதிபர் ரவி வைத்யாலங்கார திடீரென சிங்கப்பூருக்கு மேற்கொண்ட இரகசியப் பயணத்தை அடுத்தே, இந்த தொடர்புகள் அம்பலமாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!