மைத்திரி, ரணிலுடன் சம்பந்தன் இன்று முக்கிய பேச்சு!

புதிய அரசமைப்பு விவகாரம் தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று மாலை நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தக் கலந்துரையாடலுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைக்க வேண்டும் என்று அரசிடம் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய – நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு புதிய அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும்.அதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடனும் இணைந்து பணியாற்ற நாம் தயார். எமக்கு எவரும் எதிரிகள் அல்லர்.

இந்த நாட்டை ஆண்ட முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா அம்மையார், மஹிந்த ராஜபக்ச போன்றோராலும், தற்போதைய அரசாலும் பல்வேறு அரசியல் தீர்வுத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.பலவிதமான அறிக்கைகள் எம்மிடம் உள்ளன. பல நிபுணர்களின் அறிக்கைகளும் உள்ளன. இவை எல்லாவற்றையும் வைத்து நல்ல தீர்வு ஒன்று கொண்டு வரப்பட வேண்டும். அதற்காக நாம் செயற்படுகின்றோம்.

1987ஆம் ஆண்டு இந்திய அரசின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட 13ஆவது அரசமைப்பின்படி முதன்முறையாக அதிகாரம் பகிரப்பட்டது. அன்று முதல் இன்றுவரை தீர்வுக்கான எமது பயணம் தொடர்கின்றது.ஒரு தீர்வுத் திட்டத்தைக் கொண்டு வரும்போது மக்களின் கருத்தை நாம் கேட்போம், ஆலோசனைகளைப் பெறுவோம். பல்வேறு நாடுகளில் உள்ள நடைமுறைகளை ஆராய்ந்துதான் தீர்வுத்திட்டத்தை நாம் ஏற்போம்.

தற்போது நாடாளுமன்றம் ஓர் அரசமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டுள்ளது. உப குழுக்கள் அமைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதன் பணிகள் தொடர்கின்றன. அதனைத் தொடர்ந்து நீட்டிக்காமல், நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் இன்று நேரில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளோம்.

இந்தக் கலந்துரையாடலுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைக்குமாறு அரசிடம் நாம் கோரியிருக்கிறோம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!