அட்மிரல் கரன்னகொடவுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரம் தாக்கல்

கொழும்பில் 2008 – 09ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கில், சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு எதிராக விரைவில் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையின் போது, மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தம்மைக் கைது செய்வதற்கு முயற்சிப்பதாகவும், அதனைத் தடுத்து நிறுத்தும் இடைக்கால ஆணையைப் பிறப்பிக்குமாறும் கோரி, அட்மிரல் வசந்த கரன்னகொட உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று தலைமை நீதியரசர் நளின் பெரேரா, நீதியரசர்கள் பிரியந்த ஜெயவர்த்தன, முர்து பெர்னான்டோ ஆகியோரைக் கொண்ட அமர்வினால், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, தனிப்பட்ட காரணங்களுக்காக, இந்த மனு மீதான பரிசீலனையில் இருந்து விலகிக் கொள்வதாக நீதியரசர் பிரியந்த ஜெயவர்த்தன அறிவித்தார்.

இதையடுத்து, இந்த அடிப்படை உரிமை மனுவை மார்ச் 7ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதென் நீதியரசர்கள் முடிவு செய்தனர்.

நேற்றைய விசாரணைகளின் போது, சட்டமா அதிபரின் சார்பில் முன்னிலையான, மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, கொழும்பில் 2008-09 காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு எதிரான விசாரணைகள் முடிந்து விட்டதாகவும், அவருக்கு எதிராக விரைவில் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!