அட்மிரல் கரன்னகொட உள்ளிட்ட கடற்படையினருக்கு எதிராக ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம்

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட மற்றும் ஏனைய கடற்படை அதிகாரிகளுக்கு எதிராக, மேல்நீதிமன்ற ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கு ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகளை கருத்தில் கொண்டு, குற்றவியல் சட்டத்தின், 450 ஆவது பிரிவின் கீழ், மேல்நீதிமன்ற ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க முடியும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் கருதுகிறது.

சட்ட மா அதிபர் திணைக்களம் விரைவில் தமது முடிவை, தலைமை நீதியரசருக்கு அறிவிக்கவுள்ளது. அதன் பின்னர், தலைமை நீதியரசர், இந்த தீர்ப்பாயத்துக்கான நீதிபதிகளைத் தெரிவு செய்வார்.

அதேவேளை, 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம் விரைவில் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்யவுள்ளதாகவும், அவரை விரைவில் நீதிமன்றத்தில் நிறுத்த முடியும் என்று நம்புவதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அட்மிரல் கரன்னகொட தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை வழக்கு கடந்தவாரம், உச்சநீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அட்மிரல் கரன்னகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படமாட்டார் என்று என்று உறுதியளிக்க முடியாது என்று மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் விராஜ் தயாரத்ன தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!