பேரறிவாளனிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றவரின் முக்கிய காணொளி வெளியீடு!

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்ற அப்போதைய பொலிஸ் அதிகாரி ஒருவரின் காணொளியொன்றை, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

குறித்த காணொளியில், பேரறிவாளன் கொலை மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக எவ்வித ஆதாரங்களும் இல்லை. மாறாக இலட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் மீது இரக்கமும், தமிழ் மீது பற்றும் கொண்டவர் என ஓய்வுபெற்ற குறித்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

“எந்த ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொண்டு எனது மகனை குற்றவாளி என சட்டம் சொன்னதோ அதை பதிவு செய்த அதிகாரியின் குரல் இது” என குறிப்பிட்டுள்ள அற்புதம்மாள் தனது மகனை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் 9ஆம் திகதி மனிதசங்கிலி போராட்டம் இடம்பெறவுள்ள நிலையில் இந்த காணொளி வெளியாகியுள்ளமை முக்கிய அம்சமாகும்.

இதேவேளை, இந்திய சட்டத்தின் 161ஆவது பிரிவை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட மாநில அரசே அவர்களை விடுதலை செய்யலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் தமிழக அமைச்சரவை தீர்மானமொன்றை நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பிவைத்தது.

எனினும், ஆளுநர் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை. இந்நிலையில், எதிர்வரும் 9ஆம் திகதி முன்னெடுக்கவுள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி சட்டத்தரணிகளை அற்புதம்மாள் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!