சீனாவில் கைது செய்யப்பட்ட கனடா நாட்டினர் 2 பேரும் உளவாளிகள் என குற்றச்சாட்டு.

சீனாவின் பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனம் ஹூவாய், அமெரிக்காவின் பொருளாதார தடையை மீறி ஈரான் நாட்டுடன் வர்த்தகம் மேற்கொண்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதனிடையே, ஹூவாய் அதிபர் ரென் ஜெங்பெய்யின் மகளும், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான மெங்வான்ஜவ் கனடாவின் வான்கூவர் நகர விமான நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந் தேதி கைது செய்யப்பட்டார். இதனால் சீனா-கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. மெங்வான்ஜவ் கைது செய்யப்பட்ட சில நாட்களில் கனடாவை சேர்ந்த முன்னாள் தூதரக அதிகாரி மைக்கேல் கோவ்ரிக் மற்றும் தொழிலதிபர் மைக்கேல் ஸ்பாவோர் ஆகிய 2 பேரை சீனா கைது செய்தது. அவர்கள் தங்களது சட்ட விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதால் கைது செய்யப்பட்டதாக சீனா தெரிவித்தது.

இந்த நிலையில் மைக்கேல் கோவ்ரிக், மைக்கேல் ஸ்பாவோர் ஆகிய 2 பேரும் கனடாவுக்காக உளவு பார்த்ததாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது. இருவரும் சீனாவின் முக்கிய தகவல்களை திருடி, கனடாவிடம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெங்வான்ஜவ்வை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதற்கான ஏற்பாடுகளை கனடா முன்னெடுக்க தொடங்கியுள்ள நிலையில், சீனா இந்த நடவடிக்கை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!