ஐ.எஸ். தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் : இராணுவ வீரர்கள் 6 பேர் பலி

மக்மூர் என்ற இடத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, துணை இராணுவ வீரர்கள் சென்ற ஒரு பஸ் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒழிப்பில் இராணுவ வீரர்கள் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு பக்கபலமாக இருந்தவர்கள் ஹசாத் ஷாபி என அழைக்கப்படும் அணிதிரள் படை வீரர்கள். இவர்கள் அரசு ஆதரவுடன் பயங்கரவாதத்துக்கு எதிராக சண்டையிடுவதால் துணை இராணுவ வீரர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

இந் நிலையில், ஹசாத் ஷாபி படை வீரர்கள் விடுமுறையையொட்டி ஊர்களுக்கு செல்வதற்காக தலைநகர் பாக்தாத்தில் இருந்து சலாலுதீன் மாகாணம் நோக்கி பஸ்களில் சென்று கொண்டிருந்தனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்மூர் என்ற இடத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, துணை இராணுவ வீரர்கள் சென்ற ஒரு பஸ் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். குண்டுகளை வெடிக்க செய்தும், துப்பாக்கியால் சுட்டும் நடத்திய இந்த தாக்குதலில் வீரர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் 31 வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!