“கூட்டாட்சியில் எந்த மாற்றங்களும் இனி ஏற்படாது”

புதிய அமைச்சரவையுடன் தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி இணைந்து முன்னெடுக்கும் கூட்டாட்சியில் எந்த மாற்றங்களும் இனி ஏற்படாது. அதன்படி முன்னர் அரசாங்கத்தில் காணப்பட்ட குறைகளை சரி செய்து வெற்றிப் பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம்” என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

விவசாயத்துறை அமைச்சில் நேற்று தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்ட விடயங்கள் காரணமாக அரசாங்கம் அண்மைக்காலமாக பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. இதன் காரணமாக அரசாங்கம் சில பின்னடைவுகளையும் சந்தித்திருந்தது. எனினும் தற்போது அரசாங்கத்தின் நெருக்கடிகள் குறைவடைவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

தற்போது அமைச்சரவையில் பகுதியளவு மாற்றங்கள் ஏறபடுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய புதிய அமைச்சுக்கான பொறுப்புக்கள் அடங்கிய வர்தமானி அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது. அதன் படி புதிய அமைச்சுக்களை பொறுப்பேற்ற அனைவரும் எமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.

அத்தோடு ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இணைந்த தேசிய அரசாங்கத்தில் மாற்றங்கள் ஏற்படாது. இரு கட்சிகளினாலும் முன்வைக்கப்படும் கொள்கைகளில் சிறந்தவற்றை எடுத்து அவற்றினை நாட்டை மேலும் முன் கொண்டு செல்வதற்காக செயற்படுத்த வேண்டும்.

மேலும் இரு கட்சிகளும் எதிர்காலத்தில் அடுத்த தேர்தலில் தமது கட்சியை வெற்றி பெறச் செய்வது எவ்வாறு? அதிகாரத்தை கைப்பற்றுவது எவ்வாறு? போன்ற விடயங்களில் தமது கவனத்தை செலுத்தாது நாட்டை முன்னொக்கி கொண்டு செல்வது தொர்பிலேயே தமது கவனத்தை செலுத்த வேண்டும். தற்போது அதிகாரம் உடையவர்கள் வேலை செய்வதற்கு சோம்பல்படுகின்றனர்.அதே போன்று அதிகாரம் கைகளில் இல்லாதவர்கள் அதனை எல்வாறு பெறுவது என்பதில் மும்முரமாக உள்ளனர். இவை இரண்டுமே நாட்டின் முன்னெற்றத்திற்கு தடை ஆகும். இவ்வாறான விடயங்களை தவிர்க்க வேண்டும்.” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!