ஜெய்ஷ் இ முகமது அமைப்பை பாகிஸ்தான் பாதுகாக்கிறதா? -இந்தியா கேள்வி

பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது அமைப்பை பாகிஸ்தான் அரசு பாதுகாக்கிறதா? என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கேள்வி எழுப்பி உள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. அதையடுத்து, இந்திய பகுதிக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். இத்தகைய சம்பவங்களால், இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.

இதற்கிடையே பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளதாக பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீது தலைமையிலான ஜமாத் உத் தவா, அதன் அறக்கட்டளையான பலா இ இன்சானியாத் பவுண்டேசன் ஆகியவற்றை பாகிஸ்தான் அரசு தடை செய்து, அவற்றின் சொத்துகளை முடக்கியது. லாகூரில் உள்ள ஜமாத் உத் தவா தலைமையகத்துக்கு ‘சீல்’ வைத்தது. 40 கி.மீ. தொலைவில் உள்ள அறக்கட்டளையின் தலைமையகத்துக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.

பாகிஸ்தான் மண்ணிலிருந்து எந்த ஒரு பயங்கரவாத இயக்கமும் பயங்கரவாத தாக்குதலை நடத்த அனுமதிக்க மாட்டோம் என பிரதமர் இம்ரான் கான் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் 2வது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறிய பாகிஸ்தான், அதற்கான ஆதாரத்தை காட்டலாமே? 2-வது விமானத்தை வீழ்த்தியதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாக கூறும் பாகிஸ்தான், அந்த ஆதாரத்தை ஏன் சர்வதேச ஊடகங்களில் வெளியிடவில்லை? எப்-16 ரக விமானங்களை பாகிஸ்தான் வாங்கி குவித்து, அதில் ஒன்று வீழ்த்தப்பட்ட ஆதாரம் இந்தியாவிடம் உள்ளது.

பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது அமைப்பை பாகிஸ்தான் அரசு பாதுகாக்கிறதா? புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்ற பிறகும் பாகிஸ்தான் அதை மறுக்கிறது. புதிய பாகிஸ்தான் உருவானதாக கூறிய இம்ரான் கான், பயங்கரவாத அமைப்புகள் மீது புதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!